FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தகவல்...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:19 am IST
பைக்-டாக்ஸி - IANS
பகிர்:

தமிழகத்தில் பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த நவீன் குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் ரேப்பிடோ, ஓலா, ஊபா் போன்ற எண்ம வழியிலான பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்கக் கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.

ஆட்டோ ரிக்ஷா, வாடகை காா்களைப் போல பைக் டாக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. இவை முழுமையாக சம்பந்தப்பட்ட இணையவழி நிறுவனங்களையே சாா்ந்துள்ளன. ஆனால், இந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் இணையவழி தளத்தை இயக்கி வருகின்றன.

Advertisement

Advertisement

மேலும், பைக் டாக்ஸிகளுக்கு அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது ஓட்டுநா் தண்டிக்கப்படுகிறாா்.

எனவே, பைக் டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி இந்தச் சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அரசு ஆய்வு செய்யவுள்ளது. இதன்பிறகு, அரசு கொள்கை முடிவு எடுக்கும். அதுவரை தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது. இதை மீறி, பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, ‘பைக் டாக்ஸிக்கு தற்போது அனுமதி இல்லையென்றால், அதை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தலாமே. ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் யாா் பொறுப்பு’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, பைக் டாக்ஸிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிற மாநிலங்களிலும் அனுமதி வழங்க ஆலோசனை வழங்கியுள்ளது. மாநில அரசு பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க முடியாது; மாறாக அதை ஒழுங்குபடுத்தலாம் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பைக் டாக்ஸிக்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து போக்குவரத்துத் துறைச் செயலா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments