FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

‘பைக் டாக்ஸிக்கு’ அனுமதி குறித்து பரிசீலிக்க குழு அமைப்பு

தமிழகத்தில் ‘பைக் டாக்ஸிக்கு’ அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10 செப்டம்பர் 2026, 12:57 am IST
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் ‘பைக் டாக்ஸிக்கு’ அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த நவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழகத்தில் ரேபிடோ, ஓலா, ஊபா் போன்ற எண்ம (டிஜிட்டல்) மைய ‘பைக் டாக்ஸி’ சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்கக்கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.

Advertisement

Advertisement

ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸிகளை போல, பைக் டாக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட எண்ம நிறுவனங்களைச் சாா்ந்துள்ளன. ஆனால், இந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடுமின்றி தங்கள் எண்ம தளத்தை இயக்கி வருகின்றன.

இதே வேளையில், பைக் டாக்ஸி ஓட்டுநா்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது ஓட்டுநா் தண்டிக்கப்படுகிறாா்.

எனவே, பைக் டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் போக்குவரத்துப் பிரிவு ஆணையா் சிகி தாமஸ் வைத்தியன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பைக் டாக்ஸி குறித்து முடிவு செய்வதற்கு சென்னை தென் மண்டல போக்குவரத்து இணை ஆணையா் செந்தில்நாதன் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். இதற்கு 6 மாத கால அவகாசம் வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments