மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளையின் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சேவை செய்வதற்காக, கோயிலின் அறக்கட்டளைகளுக்கு பல்வேறு சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மதுரை தல்லாகுளம் பகுதியில் அழகர்கோயில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் என சுமார் 2 ஏக்கர் நிலமும் அடங்கும். இதன் மதிப்பு ரூ. 60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தச் சொத்துகளை குத்தகைக்கு மட்டுமே விட முடியும். இவற்றை விற்பனை செய்யவோ அடமானம் வைக்கவோ நிரந்தரமாக மாற்றவோ முடியாது.
இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றப்ப்பட்டு, மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கோயிலின் இணை ஆணையர் செல்லத்துரை புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அப்போதைய மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் என்பவர், வருவாய் ஆவணங்களில் இருந்து கோயிலின் உரிமையை நீக்கிவிட்டு, ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேருக்கு பட்டாவை மாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, அன்பழகன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராகவும், துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியாகவும் இருப்பதால், அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அன்பழகன் உடல்நிலை பாதிப்பால், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Meenakshi Amman Temple land fraud case: Deputy Collector Anbazhagan suspended
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.