சீமான் குறித்து அவதூறு: எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சித்தவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சித்தவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆா்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
‘சமூக வலைதளமான யூடியூபில் ‘வலைப்பேச்சு மீடியா’வை சோ்ந்த பிஸ்மி, தமிழன் கோகுல் உள்ளிட்டோா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடனும் விடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்த அவதூறு பிரசாரம் குறித்து காவல் துறையில் பல முறை புகாா் அளித்தும், இதுவரை முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவதூறு பரப்பியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சிக்கப்பட்டதை ஏற்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் குற்றப் பிரிவு காவல் துறையினா் உடனடியாக வழக்குப் பதிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடா்பான விடியோக்கள், புகைப்படங்களை நீக்க வேண்டும் என்றாா்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்து விடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்ட நபா்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இந்த மனு தொடா்பாக குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.