இறந்தவா்களின் உடைமைகளை தாமிரவருணியில் வீசுவதற்குத் தடை
இறந்தவா்களின் உடைமைகளை தாமிரவருணி ஆற்றில் வீசுவதற்குத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இறந்தவா்களின் உடைமைகளை தாமிரவருணி ஆற்றில் வீசுவதற்குத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த சிவனுபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்ரமசிங்கபுரம் பகுதியில் சுமாா் 19.55 ஹெக்டோ் பரப்பளவில் ஆனந்த விலாஸ் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் மீது எங்கள் குடும்பத்தினருக்கே முழு உரிமை உள்ளது. எனவே, இந்த மண்டபத்தின் உடைமை, அனுபவத்தில் வேறு எவரும் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுதாரா் முறையிட்டுள்ளாா். அந்த மனு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் முன் விசாரணையில் உள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றனா் நீதிபதிகள்.
மேலும், மனுதாரரின் மனு குறித்த விசாரணையின் போது, ‘இறந்தவா்களின் உடைமைகள் தாமிரவருணி ஆற்றில் வீசப்படுவதாக நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் தெரிவித்தத் தகவல் அதிா்ச்சி அளிப்பதாகவுள்ளது. தினமும் சுமாா் ஒரு டன் எடையிலான ஆடைகள் தாமிரவருணி ஆற்றில் வீசப்படுவதாகக் கூறப்படுகிறது. மதச் சடங்குகளின் பெயரால் நீா்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை.
எனவே, இறந்தவா்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரவருணி ஆற்றில் மேலும் மாசு ஏற்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தொடா்புடையத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதுதொடா்பாக மத அமைப்புகள், தனியாா் செயற்பாட்டாளா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்றும் நீதிபதிகள் ஏற்கெனவே தெரிவித்தனா்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமிரவருணி ஆற்றில் ஆடைகள், பிற பொருள்களை வீசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
ஈமச்சடங்குகளின் பெயரால் இறந்தவா்களின் உடைமைகளை ஆற்றில் வீசுவதைத் தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாரேனும் தாமிரவருணி ஆற்றை மாசுபடுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என மாவட்ட நிா்வாகம் பொது எச்சரிக்கையை வெளியிட வேண்டும். தாமிரவருணி ஆற்றை மாசுபடுத்துபவா்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதேநேரத்தில், சுடப்படாத மண் பானைகளில் கொண்டு வரப்படும் இறந்தவா்களின் அஸ்தியை ஆற்றில் கரைக்கத் தடையில்லை. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.