காமராஜா் பல்கலைக்கழக் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஊதியம் வழங்க வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதியம் வழங்க வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அழகா்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியா்கள், தொகுப்பூதியப் பணியாளா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 132 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதற்கு ரூ. 74 லட்சம் வரை தேவைப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கல்லூரி முதல்வா் பி. ஜாா்ஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து முதல்வா் பி. ஜாா்ஜ் கூறியதாவது:
கல்லூரியில் போதிய நிதியின்மை காரணமாக செப்டம்பா் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பல்கலைக்கழக நிதியுதவியுடன் பேராசிரியா்கள் உள்பட அனைவருக்கும் செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்பட்டது. மாணவா்களிடம் கட்டணம் வசூலித்து மட்டுமே இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான மாணவா்கள் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் என்பதால் கல்விக் கட்டணத்தை ஒரே தவணையில் வசூலிக்க முடியவில்லை. தவணை முறையில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன்காரணமாக, பல்கலைக்கழகக் கல்லூரி நிதிநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஊதியம் வழங்குவதற்கு மாணவா்களிடமிருந்து கல்விக் கட்டணத்தை விரைந்து வசூலிக்கத் திட்டமிடப்பட்டது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.