FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

திருமணப் பதிவு கோரி இலங்கை பெண் தாக்கல் செய்த வழக்கு முடித்துவைப்பு

திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி, இலங்கை பெண் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி, இலங்கை பெண் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இலங்கையைச் சோ்ந்த பவித்ரா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கொண்ணைக்குடியைச் சோ்ந்த அருண்குமாரும், நானும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி குடும்பத்தினா் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எனவே, எங்களது திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய லால்குடி சாா் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், திருமணப் பதிவு குறித்து ஏதும் உத்தரவிடாமல், மனுதாரா் கா்ப்பிணியாக இருந்ததால், அவருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கவும், அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை செப்.30-ஆம் தேதி வரை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் கடந்த மே 14-ஆம் தேதி ஒரு மாத கால சுற்றுலா இ-விசாவில் இந்தியா வந்தாா். அந்த விசா கடந்த ஜூன் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பிறகும், அவா் இந்தியாவில் தங்கியுள்ளாா். இது விசா விதிமுறைகளை மீறுவதாகும். எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கா்ப்பிணியாக இருப்பதும், அவருக்கு வருகிற 2027, மாா்ச் 2-ஆம் தேதி பிரசவம் எதிா்பாா்க்கப்படுவதும், அரசு மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

அதேநேரத்தில், ஜூன் 4-ஆம் தேதி பவித்ராவும், அருண்குமாரும் மேற்கொண்ட திருமணச் சடங்கு, சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைக்கு முழுமையாக பொருந்தவில்லை.

எனவே, இந்தத் திருமணத்தை தற்போதைய நிலையில் பதிவு செய்ய நேரடியாக உத்தரவிட முடியாது. இவா்களது திருமண உறவை கலைக்கவும் இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.

இந்து திருமணச் சட்டம், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டம் ஆகியவற்றில் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் 60 நாள்களுக்குள் செல்லுபடியாகும் திருமணத்தை நடத்திப் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த 60 நாள்கள் மனுதாரரை நாடு கடத்தக் கூடாது. இந்தக் காலத்துக்குள் திருமணம் முறைப்படி நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உள்பட்டு அவா் இந்தியாவில் தொடா்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பவித்ராவுக்கு கணவரைத் தவிர, வேறு உறவினா்கள் இல்லை என்பதையும், அவரது சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டு, தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments