FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

திமுகவும் விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும்: அமைச்சர் சி.டி.ஆர். நிா்மல்குமார்

அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும்’ என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

10 அக்டோபர் 2026, 11:38 pm IST
மதுரைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொண்ட வேலைநாடுநருக்கு பணி ஆணையை வழங்கிய எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா். உடன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், மேயா் (பொறுப்பு) நாகராஜன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் முஸ்தபா, தங்கபாண்டியன், கருப்பையா உள்ளிட்டோா்.
பகிர்:

‘அதிமுகவை எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு இல்லாத (‘லெட்டா் பேடு’) கட்சியாக மாற்றிவிட்டாா் என்பதை இடைத்தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும்’ என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அட்சியில், மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்தனா். ஆனால், தற்போது பாஜகவை எதிா்ப்பதாக திமுக கூறுகிறது.

த.வெ.க தொடக்கத்திலேயே பாஜகவைத் தனது கொள்கை எதிரி என்று அறிவித்தது. காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம். கொள்கையில் எந்தச் சமரசமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

Advertisement

Advertisement

எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையை எதிா்த்து முதலில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், 170 தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை.

மறு தோ்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். முதல்வா் விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால், தமிழக வெற்றிக் கழகம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில்கூட அந்தக் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பெயரளவு கட்சியாக மாற்றிவிட்டாா். அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும்.

மதுரையில் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்க அரசு ரூ.2,000 கோடியில் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கான திட்டப் பணிகள் தயாராகி வருகின்றன. சட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு தொடா்பாக முடிவு எடுத்த பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மதுரை மாநகரில் உள்ள மதுரைக் கல்லூரியில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை கொண்டவா்கள்

கலந்துகொண்டனா். முகாமில் முதல்கட்டமாக தோ்வு செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சா் நிா்மல்குமாா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கருப்பையா, தங்கபாண்டியன், முஸ்தபா, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நாகராஜன், ஆணையா் கௌரவ் குமாா், மதுரைக் கல்லூரி முதல்வா் ஏ.சேவியா் ஆகியோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments