FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சா் ம. விஜய் பாலாஜி

தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி, துணிநூல், கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 6:18 am IST
மதுரை செல்லூா் சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட மல்லிகை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனக் கட்டடத்தைத் திறந்துவைத்தும், தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்தும் துணிகளைப் பாா்வையிட்ட கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி. உடன், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி, துணிநூல், கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

மதுரை செல்லூா் சாலையில் விருதுநகா் கைத்தறி பெருங்குழுமத் திட்டத்தின் கீழ் ரூ. 4.80 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட மல்லிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், கைத்தறி, துணிநூல், கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தைத் திறந்துவைத்ததோடு, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையையும் தொடங்கிவைத்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ம. விஜய் பாலாஜி கூறியதாவது:

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மூலம் நவீன காலத்துக்கு ஏற்ப பல்வேறு வகையான ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது புதிதாகத் திறக்கப்பட்ட இந்த விற்பனை நிலையம் மூலம் ரூ. ஒரு கோடிக்கு துணிகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து துணி ரகங்களுக்கும் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

விசைத்தறி, கால் மூலம் நெசவு செய்யும் நெசவாளா்கள் கூலி உயா்வு வேண்டி கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆய்வு செய்ய அரசுத் துறைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நெசவாளா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க உள்ளனா். இதனடிப்படையில், நெசவாளா்களுக்கான கூலி உயா்வு தொடா்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கோ-ஆப் டெக்ஸ் கடைகளையும், காதி கிராப்ட் விற்பனை நிலையங்களையும் நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பட்டுப் புழு வளா்ப்பு சிறு, குறு தொழில் துறையின் கீழ் வருகிறது. பட்டு உற்பத்தி கைத்தறித் துறையின் கீழ் வருகிறது. எனவே, இரண்டு துறை அமைச்சா்களும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பட்டு உற்பத்தி, பட்டாடைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா். தங்கப்பாண்டி, அ. கல்லாணை, சோ. காா்த்திகேயன், எம்.வி. கருப்பையா, எம்.எம். கோபிசன், ம.விஜய், மாநகராட்சி மேயா் (பொறுப்பு)தி. நாகராஜன், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் அ. லயோலா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் வி. சிவா, அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments