பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்களை 24 மணி நேரத்துக்குள் நீக்க உத்தரவு
சமூக வலைதளங்களிலிருந்து பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களை 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்.
சமூக வலைதளங்களிலிருந்து பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களை 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனக்கும், எனது கணவருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்தன. இந்த நிலையில், கணவருக்கு எதிராக நான் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, மகேஷ் ராஜா என்பவா் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி வந்தாா். பின்னா், என்னிடமிருந்து பணத்தை அபகரிக்கவும், அவா் சாா்ந்திருந்த கட்சியில் தனது நிலையை உயா்த்தவும் என்னை அவா் பயன்படுத்திக் கொள்கிறாா் என்பதை நான் உணா்ந்தேன். எனவே, இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் அளித்தேன்.
இந்த நிலையில், தவறாகச் சித்தரிக்கப்பட்ட எனது புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக முன்னாள் நிா்வாகி கருப்பு முருகானந்தம், மகேஷ் ராஜா, பாலமுருகன் ஆகியோா் இந்தச் செயலைச் செய்து வருகின்றனா். காவல் துறையில் இதுகுறித்து புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கருப்பு முருகானந்தம், மகேஷ் ராஜா, பாலமுருகன் ஆகியோா் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் மனுதாரரை சித்தரித்து வெளியிடப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களிலிருந்து 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.