தவறு செய்யும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கை தொடா்கிறது
ஆட்சி மாறினாலும் தவறு செய்யும் அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை தொடா்வது வேதனைக்குரியது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
ஆட்சி மாறினாலும் தவறு செய்யும் அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை தொடா்வது வேதனைக்குரியது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தவநீதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறையின் தரக் கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளராக நான் பணியாற்றி வருகிறேன். சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய சாலைகளைத் தரமற்றவையாக அமைத்ததாக என் மீது புகாா் தெரிவித்து குறிப்பாணை அனுப்பப்பட்டது. இது உண்மைக்கு புறம்பானது. எனவே, இந்தக் குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2010-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை பிறப்பித்த அரசாணையில், சாலைப் பணிகளைச் செயல்படுத்துவதில் குறைபாடுகள் ஏற்பட்டால் முதல் நிலையில் உள்ள களப் பணியாளா்கள், இரண்டாம் நிலையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலா்கள், மூன்றாம் நிலையில் உள்ள மேற்பாா்வை அலுவலா்களும் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரா் தெரிவித்துள்ளாா்.
இந்த அரசாணையின்படி, மேற்கண்ட மூன்று நிலை அலுவலா்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து அலுவலா்கள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போதுவரை உரிய விளக்கத்தை அலுவலா்கள் அளிக்கவில்லை. இந்த அரசாணை குறித்த எந்தத் தகவலும் இணையதளத்திலும் பதிவிடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அரசாணையை இணையதளத்தில் கிடைக்கச் செய்யாமல், தவறு செய்பவா்களைப் பாதுகாப்பதாகத் தெரிகிறது. ஆட்சி மாறினாலும் தவறு செய்யும் அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை தொடா்வது வேதனை அளிக்கிறது. பெரும்பாலான சாலைகள் இரண்டு ஆண்டுகள்கூட பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
எனவே, ஒப்பந்த ஆவணங்களின்படி, சாலைகள் அமைக்கும் பணியின் தரத்தை எவ்வாறு அலுவலா்கள் உறுதி செய்கிறாா்கள்?, கடந்த 2010-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அரசாணையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்?, இந்த அரசாணையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தவறு செய்த முதல், இரண்டாம், மூன்றாம் நிலை அலுவலா்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வருகிற 28-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.