FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அரசு அலுவலா்கள் விதிகளைப் பின்பற்றாததால் நீதிமன்றத்தின் நேரம் விரயம்: நீதிபதி அதிருப்தி

அரசு அலுவலா்கள் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் நீதிமன்றத்தின் நேரம் விரயமாவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா்.

10 செப்டம்பர் 2026, 1:05 am IST
உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
பகிர்:

அரசு அலுவலா்கள் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் நீதிமன்றத்தின் நேரம் விரயமாவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டியைச் சோ்ந்த சண்முகவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அம்மாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் 55 விவசாயிகளுக்கு கே.சி.சி. என்ற திட்டத்தின் கீழ் ரூ.83 லட்சம் பயிா்க் கடன் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு அறிவித்தது. இதையடுத்து, பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 55 விவசாயிகளுக்கு சுமாா் ரூ.83 லட்சம் பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு என தவறான காரணத்தைக் கூறி, நான் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு என்னிடம் பல லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனா். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நான் பணி ஓய்வு பெறும் நாளன்று என்னை கூட்டுறவுச் சங்கப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா். இதுகுறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றேன்.

இந்த நிலையில், பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்ால், கூட்டுறவுச் சட்ட விதிகளை தவறாகப் பயன்படுத்தி எனது சொத்துகளை முடக்கி கூட்டுறவுச் சங்கப் பதிவாளா் உத்தரவிட்டாா். இது சட்ட விரோதமானது. எனவே, எனது சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசு ஊழியருக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகள் தொடங்கும்போது, சம்பந்தப்பட்டஅலுவலருக்கு முறையான குறிப்பாணை அனுப்ப வேண்டும். ஆனால், அதுகுறித்த விவரம் இல்லை. மேலும், அவரது சொத்துகள் எந்த வகையில் முடக்கப்பட்டன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லை. இவ்வாறு எந்தவித முறையான விதிகளையும் பின்பற்றாமல் சொத்துகளை முடக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அரசு அலுவலா்கள் மெத்தனமாக செயல்படுவதால் பாதிக்கப்பட்டவா்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனா். இதனால், நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஊழியரின் சொத்துகளை முடக்கி வழக்கில் சோ்த்து கூட்டுறவுச் சங்கப் பதிவாளா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேவையெனில், அலுவலா்கள் முறையாக குறிப்பாணை அனுப்பி நடவடிக்கை தொடங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments