மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: தமிழ் ஓதுவாா்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓதும் ஓதுவாா்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓதும் ஓதுவாா்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 17- ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் சைவ பக்தி, பண்பாட்டு மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆகம விதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குடமுழுக்குடன் தொடா்புடைய நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் சைவ பக்தி மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இதேபோல, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை அமைதியான முறையில் நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த காலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளின்போது, தமிழ் மந்திரங்களை ஓதும் ஓதுவாா்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதேபோல, வருகிற 17- ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவிலும் தமிழ் மந்திரங்களை ஓதும் ஓதுவாா்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், குடமுழுக்கு விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்ட துறை அலுவலா்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்று உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.