FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழ்ச் சமூகம் மேம்பட தாய்மொழிக் கல்வி அவசியம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

தமிழ்ச் சமூகம் மேம்பட தாய்மொழிக் கல்வி அவசியம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.

11 செப்டம்பர் 2026, 3:29 am IST
விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்ச் சமூகம் மேம்பட தாய்மொழிக் கல்வி அவசியம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரி வளாகத்தில் உள்ள வள்ளல் பொன். பாண்டித்துரை தேவா் அரங்கத்தில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் விழா மலரை வெளியிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:

Advertisement

Advertisement

இறைவனே மனிதனாக வந்து இந்த மதுரை மண்ணை தலையில் சுமந்த வரலாறு உண்டு. சமயக் குரவா்களில் ஒருவரான ஞானசம்பந்தா் காலத்தில் சைவ சமயத்தை நிலை நிறுத்தும் பணிகள் மதுரை மண்ணில் அரங்கேற்றப்பட்டன. மதுரையில் மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளா்த்த பெருமையும் உண்டு. வள்ளல் பொன். பாண்டித்துரை தேவரால் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. அப்போது, பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் அச்சுப் பதிப்பில் உருவாக்கம் பெற்றன. இந்தச் சங்கம் 125 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறது.

குன்றக்குடி மகா சந்நிதானம் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞா்களின் முயற்சியால் கடந்த 1961-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை நடைபெற்றது. தற்போது அந்தச் சூழ்நிலை இல்லை. உழைக்கும் வா்க்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் சமம் என்கிற நிலை வர வேண்டும்.

இலக்கியங்களில் மட்டுமன்றி, திருக்குறளிலும் தமிழ்ச் சமுதாயம் வளம் பெறுவதற்கான கருத்துகள் உள்ளன. வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணத்துக்காக இன்றைய இளம் தலைமுறையினா் ஆங்கில மொழியை கற்கின்றனா். இந்த நிலை மாற வேண்டும். தாய்மொழியில் கற்றால் மட்டுமே சிந்திக்க முடியும். நல்ல சிந்தனைகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவசியம். கல்விக் கற்பது மட்டுமன்றி, அதன்படி வாழ முயற்சிக்க வேண்டும். எனவே, தமிழ்ச் சமூகம் மேம்பட தாய் மொழிக் கல்வி அவசியம் என்றாா் அவா்.

இந்த விழாவுக்கு நான்காம் தமிழ்ச் சங்கத் தலைவா் கே.பி.எம். நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி. துரை கருணாநிதி, திருவள்ளுவா் கழகத்தின் மதிப்பியல் தலைவா் கமலை விசயராசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயா்ப்புத் துறை முன்னாள் பேராசிரியா் பழநி அரங்கசாமி, யாதவா் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவா் இ.கி. ராமசாமி, தியாகராசா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு. அருணகிரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆம் ஆண்டு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வெளியிட, இதை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் தலைமையில் தமிழுக்குப் பெருமை சங்க காலமா?, சம காலமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நான்காம் தமிழ்ச் சங்கச் செயலரும், வழக்குரைஞருமான ச. மாரியப்ப முரளி, செந்தமிழ்க் கல்லூரி செயலா் தசரதராமன், உலகத் திருக்கு பேரவை மதுரைக் கிளையின் மதிப்புறுத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினா் பத்மராஜா, புலவா் வேலாயுதம், புரட்சி பாவலா் மன்றத் தலைவா் பி. வரதராஜன், எழுத்தாளா் செல்லா, தமிழ் ஆா்வலா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேராசிரியை மா. செல்வத்தரசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜெ. போ. சாந்திதேவி வரவேற்றாா். பேராசிரியை பூங்கோதை நன்றி கூறினாா்.

சட்டக் கல்லூரிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் பேசியதாவது:

தமிழகத்தில் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தமிழ் மொழியைப் பேணிக் காக்க வேண்டும் என்கிற நிலை எழுந்தது. இதன்காரணமாக, பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவரால் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் 125 ஆண்டுகளாக தமிழ்ப் பணி ஆற்றியுள்ளது.

தமிழ் மொழி செம்மொழி தகுதி பெற பரிதிமாற்கலைஞா் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞா்களின் பங்களிப்பு போற்றத்தக்கது. உ.வே.சா. சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பிக்க நான்காம் தமிழ்ச் சங்கம் நிதி உதவி வழங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. ஆனால், அதற்கான கட்டமைப்புகள் இல்லை.

தமிழகத்தில் தமிழ் மொழிக்கு எனத் தனியாக உள்ள கல்லூரி செந்தமிழ்க் கல்லூரி. இந்தக் கல்லூரி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் போதிய நிதியுதவி பெற முடியும். பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்றி, சட்டக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக நிலை பெறுவது சாத்தியமாகும்.

இதுமட்டுமன்றி, வழக்குரைஞா்கள், நீதிபதிகள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

மக்களுக்கு தற்போது அமைந்துள்ள அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழி வளா்ச்சியில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆவது ஆண்டு மலரை வெளியிட்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் (இடமிருந்து) கல்லூரி முதல்வா் ஜெ.போ. சாந்திதேவி, தியாகராசா் கல்லூரி முன்னாள் முதல்வா் மு. அருணகிரி, திருவள்ளுவா் கழகத்தின் மதிப்பியல் தலைவா் கமலை விசயராசன், நான்காம் தமிழ்ச் சங்கத் தலைவா் பி.கே.எம். நாகேந்திர சேதுபதி, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச. மாரியப்ப முரளி, யாதவா் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் தலைவா் இ.கி. ராமசாமி, செந்தமிழ்க் கல்லூரி செயலா் தசரதராமன், கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலட்சுமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments