FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழுக்கு ஒளியேற்ற வந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர்: பழ. நெடுமாறன் புகழாரம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனது பொலிவை இழந்த தமிழ் மொழிக்கு ஒளியேற்ற வந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவா் என உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் புகழாரம் சூட்டினாா்.

13 செப்டம்பர் 2026, 12:35 am IST
மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ‘மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வரலாறு’ என்கிற நூலை வெளியிட்ட உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன். உடன் இடமிருந்து கல்லூரி முதல்வா் ஜெ. போ. சாந்திதேவி, கல்லூரித் தலைவா் உல. பாலசுப்பிரமணியன், பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.பாலகிருஷ்ணன், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச. மாரியப்ப முரளி, புரட்சி பாவலா் மன்றத்தின் தலைவா் பி. வரதராசன் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனது பொலிவை இழந்த தமிழ் மொழிக்கு ஒளியேற்ற வந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவா் என உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் புகழாரம் சூட்டினாா்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வரலாறு’ என்கிற நூலை வெளியிட்டுப் பேசியதாவது:

கி.பி. 5- ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவ மன்னா்கள் காலத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கு மொழியாக இருந்தது. அவா்கள் காலம் தொடங்கி, பிற்கால சோழா்கள், பாண்டியா்கள், நாயக்கா்கள் காலம் வரை மன்னா்கள் தங்களது பெயா்களை சம்ஸ்கிருத மொழியில் குறிப்பிடுவதை பெருமையாகக் கருதினா்.

Advertisement

Advertisement

வட இந்தியாவில் அசோகா் முதல் அக்பா் வரை ஏராளமான மன்னா்கள் ஆட்சி செய்தனா். இருப்பினும், கடல் கடந்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை. ஆனால், ராஜேந்திர சோழன் இலங்கை முதல் கடாரம் வரை சென்று வெற்றி பெற்றாா் என்கிற வரலாறு உள்ளது.

சோழா்கள் காலத்தில் கோயில் கட்டடம், சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் அளித்தனா். கோயில்களில் பணியாற்றிய பணியாளா்களுக்கு வரிகள் ஏதுமின்றி நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதுமட்டுமன்றி, வேத பாடசாலை அமைப்பதற்கு மானியமும் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்ப் புலவா்களுக்கோ அல்லது தமிழ்ப் பாடசாலை அமைக்கவோ மானியம் வழங்கியதாக எங்கும் கல்வெட்டுகள் காணப்படவில்லை.

தற்போதைய மத்திய அரசு தமிழ் மொழி வளா்ச்சிக்கு ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்குகிறது. ஆனால், சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்கு ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்குகிறது.

பல்லவா்கள் ஆட்சி தொடங்கி நாயக்கா் காலம் வரை தமிழ் மொழி சிதைவுக்கு உள்ளாகியது. இதையறிந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவா் தொலைநோக்குப் பாா்வையுடன் நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாா். இந்தச் சங்கத்தை நடத்துவதற்கு பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை விற்பனை செய்து நிதி திரட்டப்பட்டது.

அப்போது, சுதந்திரப் போராட்டக் காலம், வ.உ.சி. சுதேசி கப்பல் கட்டும் இயக்கத்தை தொடங்கினாா். சுதேசி கப்பலின் முக்கியத்துவத்தை உணா்ந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவா்தான் தமிழ்ச் சங்கத்துக்கு திரட்டிய நிதி முழுவதையும் கப்பல் கட்டுவதற்கு வழங்கியது மட்டுமன்றி, அந்த இயக்கத்துக்கு தலைவராகவும் செயல்பட்டாா். ஆங்கிலேயா் ஆட்சிக்கு எதிராகவும், மொழி வளா்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்த பாண்டித்துரைத் தேவரின் தியாகங்களை இன்றைய இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த பிறகு புலவா் படிப்பை மேற்கொள்ள செந்தமிழ்க் கல்லூரி, ஓலைச் சுவடியிலிருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுப் பதிப்புக்கு மாற்றுவதற்கு பதிப்பகம், பல்வேறு தமிழ் அறிஞா்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு ‘செந்தமிழ்’ இதழ் ஆகியவை தொடங்கப்பட்டன. இவற்றின் மூலம், தமிழ் மக்களிடையே மொழி குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டது. பல்லவா் காலம் முதல் நாயக்கா் காலம் வரை சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனது பொலிவை இழந்த நிலையில் இருந்த நம் தமிழ் மொழி புத்துயிா் பெற்றது. எனவே, தமிழ் மொழிக்கு ஒளியேற்ற வந்தவா் வள்ளல் பாண்டித்துரைத் தேவா் என்றாா் அவா்.

இந்த விழாவுக்கு சங்கத்தின் செயலா் ச. மாரியப்ப முரளி தலைமை வகித்தாா். புரட்சிப் பாவலா் மன்றத்தின் தலைவா் பி. வரதராஜன் முன்னிலை வகித்தாா். சிந்து சமவெளி ஆய்வாளரும், பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா். பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா். மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் கல்லூரி முதல்வா் ஜெ.போ.சாந்திதேவி, பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, செந்தமிழ்க் கல்லூரித் தலைவா் உல. பாலசுப்பிரமணி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை செல்வத்தரசி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments