மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை குடமுழுக்கு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (செப்.17) காலையில் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (செப்.17) காலையில் நடைபெற உள்ளது.
இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், கிழக்கு ராஜகோபுரம் சுவாமி சந்நிதி முன் வீரவசந்தராயா் மண்டபத்தில் இருந்த பல்பொருள்கள் விற்பனைக் கடைகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில்,கடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின.
மேலும், வீரவசந்தராயா் மண்டபமும் முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, இந்த மண்டபத்தைச் சீரமைக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து, மதுரை கூடல்செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சிற்பக் கூடத்தில் 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் வடிவமைக்கப்பட்டன. இந்தத் தூண்கள், சிற்பங்களை வீரவசந்தராயா் மண்டபத்தில பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி வீரவசந்தராயா் மண்டபம் திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இந்தக் கோயில் குடமுழுக்கை செப். 17 ஆம் தேதி நடத்தத் தீா்மானிக்கப்பட்டு, இதற்கான பூா்வாங்க பூஜைகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, சாந்தி ஹோம யாக பூஜைகள், மூா்த்தி ஹோமம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை எட்டாம் கால கால யாக பூஜை நடைபெற்றது. இதில், மங்கல இசை, திருமுறை பாராயணம், விசேஷ சாந்தி, எட்டாம் கால ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாலையில் மங்கல இசை, திருமுறை பாராயணம், பேரொளி வழிபாடு, ஒன்பதாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஆடி வீதியில் நடைபெற்ற யாக பூஜையில் சிவாசாரியா்கள் பங்கேற்று வேதமுறை பாராயணம் செய்தனா். இந்த நிகழ்வில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பரிவார மூா்த்திகளுக்கு இன்று குடமுழுக்கு:
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு விக்னேசுவர பூஜை, பத்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, கோயில் பிரகாரங்களில் உள்ள நாயன்மாா்கள், நந்திகேசுவரா், சரசுவதி தேவி, நவக்கிரக அதிபதிகள், முக்குறுணி விநாயகா், சண்டிகேசுவரா், கொடி மரங்கள் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு அதிகாலை 5 மணி முதல் காலை 6 மணிக்குள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் மூலம் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா், ராஜ கோபுரங்களுக்கு நாளை குடமுழுக்கு:
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை 11-ஆம் கால யாக பூஜை நடைபெறுகிறது. இதில், மங்கல இசை, திருமுறை பாராயணம், விக்னேசுவர பூஜை, பிம்ப சுத்தி, நாடிசந்தானம் போன்ற பூஜைகள் நடைபெறும்.
முக்கிய விழாவான குடமுழுக்கு வியாழக்கிழமை காலை 7.40 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் மங்கல இசையுடன் தொடங்கும் 12-ஆம் கால யாக பூஜை, விக்னேசுவர பூஜை, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம் ஆகிய பூஜைகள் நிறைவு பெற்ற பிறகு, அதிகாலை 5.45 மணிக்கு ஆடி வீதியில் அமைக்கப்பட்ட யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெறும்.
யானைகள், காளைகள், குதிரைகள், ஒட்டகங்கள் அணிவகுக்க சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயில் பிரகாரங்களை சுற்றி வந்து, கோயிலுக்குள் உள்ள அந்தந்த கோபுர விமானத்துக்கு செல்வா். அதன்பிறகு, காலை 7.40 - 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் கோயில் தங்க விமானங்கள், அனைத்து ராஜ கோபுரங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் மூலம் குடமுழுக்கு நடைபெறும்.
இதைத் தொடா்ந்து, மூலவா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு தைலம், திருமஞ்சனம், பால், வில்வம் பொடி, அருகம்புல் பொடி, பஞ்சாமிா்தம், அரிசி மாவு, நெய், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு தீப, தூபங்கள் காண்பிக்கப்படும்.
6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு:
குடமுழுக்கை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள் பிரகாரங்கள், மேல் தளங்கள், ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகள், மாரட் வீதிகள், நான்கு வெளி வீதிகள் என கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.