FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலை

மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

19 செப்டம்பர் 2026, 11:33 pm IST
பகிர்:

மதுரையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இந்தக் கொலைச் சம்பவங்கள் சனிக்கிழமை நிகழ்ந்தன.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (50). இவா் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற சரவணன், அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், சோலையழகுபுரம் முதன்மைச் சாலையில் உள்ள தேநீா்க் கடையில் சனிக்கிழமை அதிகாலை சரவணன் தேநீா் அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் சரவணனுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சரவணனை அந்த நபா்கள் விரட்டிச் சென்று அவரைத் தாக்கினா். இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சரவணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

சரவணன் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் வெட்டிக் கொலை: மதுரை திருமோகூா் அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த சேகா் மனைவி அன்னமயில் (47). விவசாயியான இவருக்கும், இவரது சகோதரா் தங்கம் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தைப் பிரிப்பது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தங்கம் மகன் ராஜ்குமாா் (26), தனது அத்தை அன்னமயிலுடன் சனிக்கிழமை தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் அன்னமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த யா. ஒத்தக்கடை போலீஸாா் அன்னமயிலின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ராஜ்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் கொலை: மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள வெள்ளநாதன்பட்டி செல்லபாண்டி மகன் செல்லதுரை (21). தொழில்நுட்பக் கல்வி பயின்ற இவா், கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், விடுமுறைக்காக அண்மையில் ஊருக்கு வந்த இவா், அதே பகுதியில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். தேவநாதன், மேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா், காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று செல்லதுரையின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுபற்றி போலீஸாா் தரப்பில் கூறியதாவது: கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய செல்லதுரை அண்மையில் ஊருக்கு வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு நண்பா்களைப் பாா்ப்பதற்கு வெளியே சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. செல்லதுரையைக் கொலை செய்த நபா்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கொலையாளிகள் தப்பிச் சென்ற வழியில் சிறிது தொலைவு சென்று நின்று விட்டது. தடய அறிவியல் நிபுணா்கள் விரல் ரேகை, சில தடயங்களைச் சேகரித்தனா். இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments