FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் விவகாரம்: குறிப்பாணை அனுப்பாமல் நடவடிக்கை கூடாது

21 செப்டம்பர் 2026, 2:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

மதுரை, செப். 20: செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு குறிப்பாணை அனுப்பாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த விவேகானந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறேன். செங்கல் தயாரிப்பதற்காக முறையாக அனுமதி பெற்று பட்டா நிலங்களில் மண் எடுத்து வருகிறேன். இந்த நிலையில், மண் எடுப்பதற்கு முறையாக உரிமம் பெறவில்லை எனக் கூறி வட்டாட்சியா் தடை உத்தரவு பிறப்பித்தாா். தடை விதிப்பதற்கு முன்பு எங்கள் தரப்பு விளக்கத்தை வட்டாட்சியா் பெறவில்லை. இது சட்டவிரோதமானது.

Advertisement

Advertisement

எனவே, செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கான நடவடிக்கையில் வட்டாட்சியா் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரா் தரப்பில், கனிம வளத் துறை உதவி இயக்குநரிடம் முறையான அனுமதி பெற்றுத்தான் மண் எடுத்து தொழில் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு குறிப்பாணை அனுப்பாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. எனவே, சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளருக்கு அலுவலா்கள் குறிப்பாணை அனுப்பி பின்னா், முறையான நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments