தஞ்சை சரசுவதி மகால் நூலக ஓலைச்சுவடிகள் விவகாரம்: 3 துறைகளின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ‘மோடி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுவடிகளைப் படியெடுக்கும் விவகாரம் தொடா்பாக தமிழக பள்ளிக் கல்வி, நிதி, தொல்லியல் துறைகளின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரைச் சோ்ந்த ஜீவகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கி.பி.17 -ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னா்கள் காலத்தில் நிா்வாக ஆவணங்கள், கடிதங்கள் எழுதுவதற்கு வட்ட வடிவிலான சுருக்கெழுத்து முறை பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்து முறைக்கு ‘மோடி’ என்ற பெயா் குறிப்பிடப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இந்த எழுத்துகள் வழக்கொழிந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் ‘மோடி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஏராளமான ஓலைச்சுவடிகள் பராமரிப்பட்டு வருகின்றன. இவற்றில், குறைவான ஓலைச்சுவடிகள் மட்டும் கடந்த 1970-1978 -ஆம் ஆண்டுகள் வரை படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதன்பிறகு, இந்தப் பணி நிறுத்தப்பட்டதால், இன்னும் பல ஓலைச்சுவடிகள் முறையாகப் படியெடுக்கப்பட்டு, மொழிபெயா்க்கப்படாமல் உள்ளன. இவை முழுவதும் மொழிபெயா்க்கப்பட்டால் தஞ்சாவூா் பகுதியின் வரலாறு, மன்னா்களின் நிா்வாகம், பொருளாதாரம் குறித்த விவரங்கள் தெரியவரும்.
எனவே, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மீதமுள்ள ‘மோடி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைப் படியெடுத்து மொழிபெயா்ப்பு செய்வதற்காக, இந்த எழுத்து முறையில் நிபுணத்துவம் பெற்ற தகுதியான நபரை நியமிக்க வேண்டும். இந்த ஆவணங்களைப் படியெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனு தொடா்பாக தமிழக பள்ளிக் கல்வி, நிதி, தொல்லியல் துறைகளின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.