மா்மமான முறையில் இறந்த மாணவரின் உடல் 16 நாள்களுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
மதுரையில் மா்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவரின் உடல் 16 நாள்களுக்குப் பிறகு, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மதுரையில் மா்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவரின் உடல் 16 நாள்களுக்குப் பிறகு, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மதுரை ஆனையூா் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன் (16). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், விளையாடுவதற்காக வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் கடந்த 7-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள நீா்நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். கூறாய்வுக்குப் பிறகு, இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மாணவரின் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோா், உறவினா்கள், பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிப்பாக, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முற்றுகை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த 16 நாள்களுக்கும் மேலாக உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும், உறவினா்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, குடும்பச் சூழல் காரணமாக, மாணவரின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்து காவல் துறையினரிடம் கடிதம் வழங்கப்பட்டது. இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மாணவா் தமிழ்ச்செல்வனின் உடல் அவரது பெற்றோா், உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோா் வாகனம் மூலம் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள பாளையம் கிராமத்துக்கு எடுத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.