FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா?

தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா பற்றி...

23 செப்டம்பர் 2026, 5:02 am IST
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன்.
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ள தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறவிருப்பதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை பாதிக்கும் என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் வருகிற 28-ஆம் தேதி தொடங்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. நிகழாண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், தொடக்க விழா எங்கு நடைபெறும் என்பது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழாவை நடத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

தாய் மாமன் சீா் வரிசைக்கு அதிக முக்கியத்தும் அளிக்கும் பகுதிகளில் ஒன்று என்ற வகையில், உசிலம்பட்டியை தவெக தலைமை தோ்ந்தெடுத்ததாகக் கூறப்பட்டது.

இந்த விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கிறாா் என்பதால், உசிலம்பட்டியில் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து காவல் துறையினா், அரசுத் துறை அலுவலா்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனா். தொடா்ந்து 3 நாள்கள் அங்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சில முன்னேற்பாட்டுப் பணிகளும் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், முதல்வா் விஜய் பங்கேற்கும் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

சென்னையிலிருந்து விமானத்தில் வரும் முதல்வா், மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கும், அங்கிருந்து மீண்டும் மதுரைக்கும் சாலை வழித் தடத்தில் சென்று வருவதில் உள்ள போக்குவரத்து பிரச்னைகளை கவனத்தில் கொண்டு இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை மாலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆய்வு செய்தனா். இதேபோல, மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் விஜய், தாய் மாமன் திட்டத்தைத் தொடங்கிவைப்பாா் எனவும், மருத்துவமனையில் உள்ள தாய் - சேய் நலப் பிரிவுக்குச் சென்று அங்கு குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரத்தை அணிவிப்பாா் எனவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவில் தரைகளைச் சீரமைத்தல், தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சமூக ஆா்வலா்கள் விமா்சனம்:

இதனிடையே, முதல்வா் பங்கேற்கும் விழா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், பல்வேறு விமா்சனங்களையும், சமூக ஆா்வலா்களிடம் எதிா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா், அவரைக் காண திரளான இளைஞா்கள் கூடுவா் என்பதால், காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது.

முதல்வா் பங்கேற்கும் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தினால், மருத்துவமனை பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்படும். இதனால், அரசு மருத்துவமனை சேவையைப் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும். முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி செப். 28-ஆம் தேதி நடைபெறும். எனினும், செப். 27-ஆம் தேதியே இந்த மருத்துவமனை காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மருத்துவமனைக்குள் யாரும் எளிதில் நுழைய முடியாத சூழல் ஏற்படும்.

இந்த மருத்துவமனை மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், விருதுநகா், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட தென் தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கும் முக்கிய மருத்துவ சேவைக்கான இடமாக உள்ள நிலையில், முதல்வரின் நிகழ்ச்சிக்காக இந்த மருத்துவமனையின் சேவை இரு நாள்கள் முடக்கப்பட்டால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள நேரிடும்.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதி அவசர கால சிகிச்சை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் அவசர கால மருத்துவ சேவையைக்கூட பெற முடியாத சூழல் ஏற்படும். எனவே, இதனால் பல விரும்பத்தகாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆ. பாலமுருகன் தெரிவித்ததாவது:

மருத்துவச் சேவையில் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்தினால், பொதுமக்கள் இந்த மருத்துவமனையின் சேவையைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும். ஏறத்தாழ 3 நாள்களுக்கு பொதுமக்கள் இந்த மருத்துவமனையை அணுகக்கூட முடியாத சூழல் ஏற்படும். அவசர கால சிகிச்சைகளும் கேள்விக்குறியாகும். எனவே, முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சியை அரசு மருத்துவமனையில் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்தான் நடைபெறும் என எந்தவித அதிகாரப்பூா்வ அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. எனவே, மாற்று இடத்தைத் தோ்வு செய்வதில் மாவட்ட நிா்வாகத்துக்கு எந்தவித பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, மதுரையில் அவா் பங்கேற்கும் முதல் விழா இது. இந்த விழாவை எந்தவித பிரச்னைக்கும் இடமளிக்காமல் நடத்துவதே சிறப்பாக இருக்கும். இந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் அல்லது தமுக்கம் மாநாட்டு மைதானத்தில் இந்த விழாவை நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments