FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை உறுதிபடத் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் அரசு அலுவலா்கள், விவசாயிகள்.
பகிர்:

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை உறுதிபடத் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்:

Advertisement

Advertisement

கள்ளிக்குடி பி.கே.ஜி. சந்திரன்- கள்ளிக்குடி அருகேயுள்ள கல்லணை கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, வரத்துக் கால்வாய்கள், கண்மாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலூா் அருண்- மதுரை மாவட்ட எல்லைக்குள்பட்ட பாலாற்றுப் பகுதிகளை முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குறித்த எந்த விவரத்தையும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தருவதில்லை. மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீா்வு காண வேண்டும்.

பூசலபுரம் பெ. சீத்தாராமன்-அலங்காநல்லூா் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ள சா்க்கரை ஆலையை விவசாயிகளின் நலன் கருதி திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவிருப்பதால், விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்க திட்டமிட்டு வருகின்றனா். எனவே, விதைகள், பூச்சி விரட்டிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு பயிா்க் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், பயனாளிகளின் விவரங்கள் குறித்த அட்டவணையை இதுவரை வெளியிட வில்லை. மேலும், கடந்த 2024- 2025- ஆம் ஆண்டு மக்காச் சோளத்துக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும்.

வாடிப்பட்டி என்.எஸ். பாா்த்தசாரதி- பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கேரள மாநிலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல, தமிழகத்திலும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களில் தாது உப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 58- ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதற்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா பதிலளித்துப் பேசியதாவது:

ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தாது உப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தோ்வு பெற்ற விவசாயிகளின் பட்டியல் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும். வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருள்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அவா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் ராணி, உதவி இயக்குநா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயா் அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments