"ராமேசுவரம்-கோவை ரயிலை தினசரி இயக்க வேண்டும்'
வாரம் ஒருமுறை இயக்கப்படும் ராமேசுவரம்-கோயம்புத்தூர் ரயிலை தினசரி இயக்கவேண்டும் என, ராமநாதபுரம் மக்களவைத்
வாரம் ஒருமுறை இயக்கப்படும் ராமேசுவரம்-கோயம்புத்தூர் ரயிலை தினசரி இயக்கவேண்டும் என, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: அகல ரயில் பாதை தொடங்கப்படுவதற்கு முன் ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனால், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பலனடைந்தனர். தற்போது, அகல ரயில் பாதை தொடங்கிய பின்னர், வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை முன்பு போல் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, வேம்பாறு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயனடையும் வகையில், புதிய ரயில் பாதை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட உப்பூரில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் உப்பூருக்கு கொண்டு வர வசதியாக இருக்கும்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் அதிகமான ரயில்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில், ரயில்வே சந்திப்பாக மாற்றவேண்டும். தற்போதுள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலத்துக்கு அருகிலேயே மற்றொரு மேம்பாலம் அமைக்க வேண்டும். மதுரையிலிருந்து ராமேசுவரம் வரையிலான ரயில் பாதையை மின்மயமாக மாற்ற வேண்டும். முக்கியமாக, மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். அதற்கு வசதியாக, இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும். ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதால், தங்கச்சிமடத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும்.
ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.