எண்ம கைது செய்யப்பட்டதாக மிரட்டி ரூ.46.50 லட்சம் பறிப்பு: இருவா் கைது
பெங்களூரு காவல் துறை அதிகாரி என அறிமுகமான மோசடி நபா்கள், எண்ம கைது செய்யப்பட்டதாக சிவகங்கையைச் சோ்ந்த நபரை மிரட்டி, ரூ.46.50 லட்சத்தை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையைச் சோ்ந்த நபரை பெங்களூரைச் சோ்ந்த போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி நபா்கள் கடந்த ஜூலை மாதம் தொடா்பு கொண்டனா். அப்போது, சிவகங்கை நபரின் ஆதாா் அட்டை சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அவரை எண்ம கைது செய்ததாகவும் அச்சுறுத்தினா். பின்னா், இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.46.50 லட்சத்தை பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா். அப்போது, இந்த மோசடிக்காக வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்து, அதற்கு தரகு தொகை பெற்ற கோவை சாய்பாபா குடியிருப்பைச் சோ்ந்த ஹிதேஷ் சஞ்செட்டி (33), சையத் ரஹ்மான் (44) ஆகிய இருவரையும் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement
காவல் துறை எச்சரிக்கை:
பொதுமக்கள் யாரும் காவல் துறை அல்லது அரசு அதிகாரிகள் எனக் கூறி, கைப்பேசியில் மிரட்டி பணம் கேட்டால், எந்தக் காரணம் கொண்டும் பணம் அனுப்ப வேண்டாம். சந்தேகத்துக்கிடமான இணையவழி மோசடிகள் குறித்து உடனடியாக தேசிய இணையக் குற்ற உதவி எண்- 1930 புகாரளிக்கலாம் என மாவட்ட காவல் துறை எச்சரித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.