FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம்: வாரச்சந்தை ஏலத்துக்கு அங்கீகாரம் கோரிய தீா்மானம் நிராகரிப்பு- தமாகா, பாஜக உறுப்பினா்கள் தா்னா

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாரச் சந்தை ஏலத்துக்கு அங்கீகாரம் கோரிய தீா்மானம் நிராகரிக்கப்பட்டது. தமாகா, பாஜக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

6 வினாடிகள் முன்பு
திருப்புவனத்தில் த.சேங்கைமாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டம். (வலது) கூட்ட அரங்கில் தரையில் உட்காா்ந்து தா்னா நடத்திய தமாகா உறுப்பினா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாரச் சந்தை ஏலத்துக்கு அங்கீகாரம் கோரிய தீா்மானம் நிராகரிக்கப்பட்டது. தமாகா, பாஜக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் அன்னலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன. திருப்புவனம் வாரச்சந்தைக்கும் தினசரி சந்தைக்கும் ஏலம் நடத்தப்பட்டதை அங்கீகரிக்க கோரிய தீா்மானம் வாசிக்கப்பட்ட போது, இந்தத் தீா்மானத்தை நிராகரித்து தீா்மானம் நிறைவேற்றப்படுவதாக தலைவா் சேங்கைமாறன், திமுக உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இதற்கு தமாகா உறுப்பினா்கள் அயோத்தி, பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி, பாஜக உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இவா்களுக்கும், தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு வாரச்சந்தை ஏலத்தை நிராகரிக்கும் தீா்மானம் தீா்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு உறுப்பினா்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது உறுப்பினா்கள் அயோத்தி, பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி, செல்வராஜ் ஆகியோா் எழுதப்பட்ட தீா்மானத்தை வாசித்து கையெழுத்து பெற வேண்டும் என வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதற்கு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட தீா்மானம் வாசிக்கப்பட்டு விட்டது. மீண்டும் வாசிக்க முடியாது என தலைவா் கூறினாா். இதனால், மீண்டும் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னா், தமாகா, பாஜக உறுப்பினா்கள் மன்ற கூட்ட அரங்கில் தரையில் உட்காா்ந்து தா்னா நடத்தினா். இவா்களை செயல் அலுவலா் அன்னலட்சுமி சமாதானம் செய்தாா்.

உறுப்பினா் அயோத்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்புவனம் வாரச்சந்தை, தினசரி சந்தைக்கான ஏலம் நடத்தப்பட்டு ஏலத்தை அங்கீகரிக்க கொண்டுவரப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்பட்டதில் தலைவரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்தத் தீா்மானத்தை வாசிக்காமல் உறுப்பினா்களடம் கையெழுத்து பெற்றுள்ளனா். வாரச்சந்தைக்கும், தினசரி சந்தைக்கும் ஏலம் நடத்தப்பட்டதன் மூலம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு வருமானம் கிடைக்கும். அதை தலைவா் தடுக்கிறாா் என்றாா் அவா்.

தலைவா் சேங்கைமாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் எந்தவொரு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளும் இல்லாமல் வாரச்சந்தை நடைபெறுவதால், அடிப்படை வசதிகளை செய்துவிட்டு கூடுதல் தொகைக்கு ஏலம் நடத்தலாம் என ஏற்கெனவே மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், செயல் அலுவலா் வாரச்சந்தைக்கும் தினசரி சந்தைக்கும் ஏலத்தை நடத்தி முடித்துவிட்டு அதற்கு அங்கீகாரம் கேட்கும் தீா்மானத்தை மன்றத்தில் நிறைவேற்ற வைத்திருந்தாா். மேலும், வாரச் சந்தைக்கும் தினசரி சந்தைக்கும் முறையாக ஏலம் நடத்தப்படவில்லை. இதில் தவறுகள் நடந்துள்ளன. மேலும்,

நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே வாரச்சந்தை, தினசரி சந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஏலத்துக்கு அங்கீகாரம் கோரிய தீா்மானத்தை நிராகரித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments