FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து சிவகங்கையில் உறவினா்கள் சாலை மறியல்

இளைஞா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் கண்டித்து, கிராம மக்கள், உறவினா்கள் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை நகா் முழுவதும் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

18 செப்டம்பர் 2026, 12:55 am IST
இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
பகிர்:

இளைஞா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் கண்டித்து, கிராம மக்கள், உறவினா்கள் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை நகா் முழுவதும் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள காயாஓடை புதுக்குடியிருப்பை சோ்ந்த கண்ணன் மகன் தெய்வேந்திரன் (27).

சிறுவேலங்குடியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பூப்பாண்டி (25). இவா்கள் இருவரையும் சிவகங்கை அருகேயுள்ள பையூா் எல்லை பகுதியில் உள்ள கொடிக்காடு கண்மாய்க்குள் 10-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், அவா்கள் தெய்வேந்திரனுடைய காரை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா். இரட்டைக் கொலை குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளா் அமலஅட்வின் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 போ் கைது:

இந்த நிலையில், இரட்டைக் கொலையில் ஈடுபட்டதாக சிவகங்கை அருகேயுள்ள பில்லூரைச் சோ்ந்த பாமுருகன் (24), தன்ராஜ் (19), சந்தோஷ் (19), மாத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25), அழுபிள்ளைதாங்கி கிராமத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் பலரைத் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிராம மக்கள் சாலை மறியல்:

கொலை செய்யப்பட்ட தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இருவரது உடல்களும் கூறாய்வுக்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவா்களது உறவினா்கள், கிராம மக்கள் வியாழக்கிழமை திரண்டு வந்து சிவகங்கை அரண்மனை வாசல் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் நகா் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. பின்னா், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் ஜெபிகிரேசியா பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிப்பதாக உறுதி அளித்ததையடுத்து, உறவினா்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா். தங்களது கோரிக்கைகள் குறித்த அரசு எடுக்கும் முடிவுக்கு பிறகே, இறந்தவா்களின் உடல்களை பெற்றுக்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என குடும்பத்தினா் தெரிவித்தனா்.

இரட்டைக் கொலை சம்பவத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து போ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments