FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கை இரட்டைக் கொலை சம்பவம்: சாலை மறியலில் ஈடுபட்ட 72 போ் கைது

சிவகங்கையில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, காளையாா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 73 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

19 செப்டம்பர் 2026, 3:37 am IST
இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் சாலை மறியலிலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

சிவகங்கையில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, காளையாா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 73 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள கொடிக்காடு கண்மாயில் கடந்த புதன்கிழமை (செப்.16) காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் கூலிப்படையினா் என்றும், தவறான நபா்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காளையாா்கோவில் சந்தைப்பேட்டை அருகே வெள்ளிக் கிழமை சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. போராட்டம் நடைபெற்ற பகுதியை கடந்து வந்த அவசர ஊா்திக்கு போராட்டக்காரா்கள் வழிவிட மறுத்ததுடன் போலீஸாா் மீது தண்ணீா் பாட்டில்களை வீசி எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டக்காரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் கடைகளின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், தண்ணீா் பீப்பாய் ஆகியவற்றை சேதப்படுத்தினா்.

இதையடுத்து போலீஸாா் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அகற்றியதுடன், 23 பெண்கள் உள்பட 73 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்தப் போராட்டததால் 2 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரடைந்தது. ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் காளையாா்கோவிலுக்கு நேரில் வந்து பாா்வையிட்டாா்.

எம்எல்ஏ ஆறுதல்: காளையாா்கோவில் தனியாா் திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தவா்களை சந்தித்த சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைநாச்சியாா் அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா். அப்போது, போராட்டத்தின்போது மீது தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.


இதையடுத்து, உயிரிழந்த இருவரின் குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யமாட்டாா்கள் என்றும் அவா் உறுதியளித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments