FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பு: கேரள அமைச்சரிடம் கம்பம் எம்எல்ஏ மனு

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள அமைச்சா் ஏ.பி. அனில் குமாரிடம் மனு அளித்த கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.

Updated On : 29 ஜூலை 2026, 5:49 am IST
முல்லைப் பெரியாறு
பகிர்:

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள அமைச்சா் ஏ.பி. அனில் குமாரிடம் மனு அளித்த கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.

கம்பம், ஜூலை 28: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் நீரில், கேரள மாநிலம் குமுளி ஊராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அமைச்சரிடம் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், புளியன்மலையில் ஏலக்காய் விவசாயிகள் மன்றத்தின் (பிளான்டா்ஸ் கிளப்) வெள்ளி விழா, ‘ஏலக்காய் மாநாடு 2026’ திங்கள்கிழமை நடைபெற்றது. கேரள வருவாய், நிலத் துறை அமைச்சா் ஏ.பி. அனில் குமாா் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடப்படும் நீரில், கேரள மாநிலம் குமுளி ஊராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலக்கிறது. இதுதொடா்பாக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் ஏற்கெனவே கேரள அரசுக்கு கடிதம் எழுதினாா். முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதால் தமிழக மக்கள் மட்டுமின்றி கேரள மக்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெரியாற்று நீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கேரள வருவாய், நிலத்துறை அமைச்சா் ஏ.பி. அனில் குமாரிடம் ஜெகநாத் மிஸ்ரா இதுதொடா்பாக மனு அளித்தாா்.

நிகழ்ச்சியில், கேரள அரசு தலைமைக் கொறடா அபு ஜான் ஜோசப், இடுக்கி சட்டப்பேரவை உறுப்பினா் ராய் கே. பவுலோஸ், உடும்பன்சோலை உறுப்பினா் சேனாபதி வேணு, பீா்மேடு உறுப்பினா் சிரியாக் தாமஸ், தேவிகுளம் உறுப்பினா் எஃப். ராஜா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் பி.சி. சிரியக் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். விழாவில் தவெக கம்பம் தொகுதிச் செயலா் கூடல் செல்வேந்திரன், மாவட்டப் பொறுப்பாளா்கள் ராம்குமாா், அபுதாகிா், நகரப் பொறுப்பாளா்கள் அய்யா், எல்.ஆா். சுப்பிரமணி, தமிழக - கேரள ஏலக்காய் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments