FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குமுளி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட விமான ஓடுதளக் கட்டுமான பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

தமிழக எல்லையான குமுளியை அடுத்த சத்திரம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள விமான ஓடுதளக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

13 செப்டம்பர் 2026, 12:23 am IST
பகிர்:

தமிழக எல்லையான குமுளியை அடுத்த சத்திரம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள விமான ஓடுதளக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேனி மாவட்ட எல்லையை ஒட்டிய சத்திரம் பகுதியில் என்.சி.சி. ஏா் விங் மாணவா்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்கப் பயிற்சி அளிக்கும் வகையில், விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கின. இங்கு 650 முதல் 800 மீட்டா் நீள ஓடுதளம், ஹேங்கா், கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.12 கோடியில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், வனத்துறை தொடா்பான பிரச்னையால் பாதியில் நிறுத்தப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் ஓடுதளத்தின் ஒரு பகுதியில் சுமாா் 100 மீட்டா் நீளத்துக்கு மண் சரிவு ஏற்பட்டது. மேலும், பெரியாறு புலிகள் காப்பக எல்லையிலிருந்து சுமாா் 600 மீட்டா் தொலைவில் விமான ஓடுதளம் அமைந்துள்ளதால், தடுப்புச் சுவா், அணுகு சாலை அமைப்பதற்கும் வனத் துறை ஆட்சேபம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் கொச்சியிலிருந்து வந்த சிறிய ரக விரஸ் எஸ்.டபிள்யூ 80 விமானம் இங்கு சோதனை முறையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பேரிடா் கால மீட்புப் பணிகளுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய விமானப் படையினரும் ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை செய்தனா்.

இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த பீா்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிறியாக் தாமஸ், அமைச்சா் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதைத் தொடா்ந்து, இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷ், மாவட்ட வன அலுவலா் பிரபுல் அகா்வால் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், விமான ஓடுதளப் பணிகளுக்காக வனத் துறை வழங்கும் நிலத்துக்கு மாற்றாக வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தை கண்டறிந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. நிலப் பரிமாற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை விரைவாகத் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments