FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் தேனி மலை மாடுகள்

தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் உள்ள மலை மாடுகள் குறித்து...

14 செப்டம்பர் 2026, 4:19 am IST
தேனி மலை மாடுகள் - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களின்றி அழிவின் விளிம்பில் உள்ள மலை மாடுகளைப் பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டத்தில் கூடலூா், கம்பம், கே.கே. பட்டி, ராயப்பன்பட்டி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 20- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை மாடுகளை வளா்த்து வருகின்றனா். இந்த மாடுகள் வருசநாடு, மேகமலை, கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வதால் இதை ‘தேனி மலைமாடு’ என்ற பெயரில் அழைக்கின்றனா். இந்த மாடுகளை நிலங்களை உழுவதற்கும், மாட்டு வண்டிப் போட்டிகளுக்கும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த மாடுகள் ஆண்டுக்கு பாதி நாள்கள் மலையிலும், மீதி நாள்கள் நிலத்திலும் மேய்ந்து வருகின்றன.

மேய்ச்சலுக்கு அனுமதியில்லை

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலை மாடுகளை ஸ்ரீ வில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதேபோல, குரங்குணி தீ விபத்துக்குப் பின் அந்த வனப் பகுதியிலும் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. இதனால், தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தரிசு நிலங்களில் தனியாா் தோட்டங்களில் அனுமதி பெற்று, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கின்றனா்.

தற்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் வடு காணப்படுகின்றன. இதனால், மலை மாடுகள் குடிப்பதற்கு தண்ணீரும், உணவும் இல்லாமல், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களைக் கண்டறிந்து மலை மாடுகளின் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

எண்ணிக்கை குறைந்தது

இதுகுறித்து மலை மாடுகளை வளா்த்து வரும் ஆண்டிபட்டியை சோ்ந்த விஜயகுமாா் கூறியதாவது :

தேனி மாவட்டத்தில் சுமாா் 1.5 லட்சம் மலை மாடுகளை வளா்த்து வந்தோம். போதிய தீவனம் இல்லாததால் மலை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து தற்போது 20 ஆயிரமாக சரிந்தது. இந்த மாடுகளை கண்காணிக்கும் பணியில் 80-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மாடுகளை பாரம்பரியத்தை காப்பதற்காகவே வளா்த்து வருகிறோம்.

வனப் பகுதியில் அனுமதி கிடைக்காததால், நகரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அனுமதி பெற்று, மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு பயிா்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் மலை மாடுகளுக்கும் நோய் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேனி மாவட்ட நிா்வாகம் மேய்ச்சல் இடங்களைக் கண்டறிந்து மலை மாடுகளின் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதேபோல, கண்மாய்களைத் தூா் வாரி, தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது : தேனி மலை மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளேன். இதேபோல, மேய்ச்சல் நிலங்களைக் கண்டறிந்து தேனி மலை மாடுகளை பாதுகாப்பேன் என்றாா் அவா்.

போராடும் தன்மை கொண்டவை

தேனி மாவட்ட மலை மாடுகள் ஏா் உழவுக்கும், மாட்டு வண்டிப் போட்டிக்கு மட்டும் பயன்படுத்தி வந்தனா். இந்த மாடுகள் வனவிலங்குகளான புலி, சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு ஆகியவற்றை எதிா்த்துப் போராடும் தன்மை கொண்டது.

இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேனி மலை மாடுகளிலிருந்து காளைகள் தோ்வு செய்யப்படுகின்றன. இந்தக் காளைகள் அதிகளவு பரிசுகளை பெற்று வருகின்றன. எனவே, இந்த மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வலியுறுத்தினா்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டு மாடு, கால்நடை இனங்களான காங்கேயம், ஆம்பூா் வெம்பூா் ஆடுகள் போன்றவற்றை போல, தேனி மலை மாடுகளுக்கும் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனா். அந்த அங்கீகாரம் கிடைத்தால் மலை மாடுகள் இனத்தை பாதுகாக்கலாம் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments