நகராட்சி வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தல்
பேருந்து நிலையம் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்து பயணிகளுக்கு பயனும், நகராட்சிக்கு வருவாயும் கிடைக்க
பேருந்து நிலையம் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்து பயணிகளுக்கு பயனும், நகராட்சிக்கு வருவாயும் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
காரைக்கால் நகராட்சிக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காரைக்கால் பேருந்து நிலையம் பயணிகள் பயன்படுத்துவதற்கென பல்நோக்கு திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் சிதிலமடைந்துள்ளதால் இவற்றை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பேருந்து நிலையத்தில், கழிப்பறைகள் தூய்மை பராமரிக்கப்படவில்லை, வெளிப்புறம் சுகாதாரமற்ற நிலை நிலவுவதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதையறிந்த, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேருந்து நிலைய வளாகத்தை புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் உள்ளிட்ட அலுவலர்களிடம் சீரமைப்புப் பணிகளில் நிலவும் தாமதத்துக்கான காரணங்களை கேட்டறிந்தார். கட்டடம் எந்தெந்த பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. நகராட்சிக்கு இதன்மூலம் கிடைக்கும் வருவாய், கட்டடத்தில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் எந்த அடிப்படையில் ஒப்பந்தம் தரப்படுகிறது உள்ளிட்ட விவரங்களையும், பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறையை தூய்மையை பராமரிக்க போதிய கவனம் செலுத்துமாறும், இதேபோல், தாய்மார்கள் பாலூட்டும் மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரிவுகளையும் தூய்மையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வுக்குறித்து அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறியது: பேருந்து நிலைய கட்டட சிதிலங்களை விரைவில் சீரமைக்கவும், பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள் முழுமையாக பயணிகள் வசதிக்காக உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப திட்டம் வகுத்து, நகராட்சிக்கான வருவாயை பெருக்க வெளிப்படையான ஒப்பந்த முறையில் கட்டடத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர், ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான கழிப்பறையை தொடர்ந்து கண்காணிக்கவும், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலைகளிலோ, பேருந்து நிலைய வளாகத்திலோ கழிவுநீர் செல்லாத வகையில் முறைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தனியார் பேருந்துகள் நிற்கும் சாலைப் பகுதி (பி.கே.சாலை) சுகாதாரமற்றதாக விளங்குகிறது. இந்த பகுதியில் தூய்மையை பராமரிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகம் தூய்மையாக இருக்கும் வகையில் சுத்தம் செய்யும் பணியில் சிறப்பு நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.