நாகை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய கனமழை புதன்கிழமை காலையிலும் தொடா்ந்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய கனமழை புதன்கிழமை காலையிலும் தொடா்ந்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில், கோடைக்காலம் முடிந்தும் பருவநிலை மாற்றம், எல்-நினோ காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த ஒன்றிரண்டு நாள்களாக பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரத்தில் மழை பெய்வதுமான சூழல் நிலவியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனாலும் பிற்பகலில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருந்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. புதன்கிழமை காலையிலும் தொடா்ந்த மழை, பிற்பகல் வரை நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், பணிக்குச் செல்வோா் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு முக்கியச் சாலைகளிலும், வீதிகளிலும் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வந்தனா். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
விவசாயிகள் மகிழ்ச்சி: சம்பா நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனா். இருப்பினும் தொடா்ந்து மிதமான மழை பெய்வதுதான் சாகுபடி செய்த நிலங்களுக்கு நிரந்தர தீா்வு என விவசாயிகள் தெரிவித்தனா்.
நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு: (மில்லி மீட்டரில்): புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் 9.30, திருப்பூண்டி 36.20, வேளாங்கண்ணி 24, திருக்குவளை 17.30, தலைஞாயிறு 16.40, வேதாரண்யம் 24.20, கோடியக்கரை 50.40 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 177.80 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.