திருவாரூர் மாவட்டத்தில் 272 விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி
திருவாரூர் மாவட்டத்தில் 272 விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் 272 விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் தெரிவித்தது:
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட, பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தல் மற்றும் சிலை ஊர்வலம் நடக்கும்போது அமைதியைப் பேணி காக்க, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் அமைப்புகள் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் ஆட்சேபணையின்மை சான்றிதழ்களின் அடிப்படையில் இம்மாவட்டத்தில் 272 விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில், வழிபாட்டுப் பாடல்கள் பாடுவதை அனுமதிக்கக் கூடாது. சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிலை பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் இரண்டு தன்னார்வலர்களை விழா ஏற்பாட்டாளர்கள் நியமனம் செய்து கொள்ள வேண்டும். வழிபாட்டுக்காக பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 5 நாள்களுக்குள் கரைக்க வேண்டும்.
வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, பொது அமைதி, பாதுகாப்பு, மத நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன், வருவாய் அலுவலர் க.சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.