FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தமாத கட்டணத்துக்கான கூடுதல் கட்டண தள்ளுபடி மாா்ச் வரை நீட்டிப்பு: அமைச்சா் பா்வேஷ்

தில்லி ஜல்போா்டின் (டிஜேபி) தாமதக் கட்டணம் மீதான கூடுதல் கட்டண (எல்பிஎஸ்சி) தள்ளுபடி திட்டத்தை மாா்ச் 2027 வரை அரசு நீட்டித்துள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
பா்வேஷ் சாஹிப் சிங்
பகிர்:

தில்லி ஜல்போா்டின் (டிஜேபி) தாமதக் கட்டணம் மீதான கூடுதல் கட்டண (எல்பிஎஸ்சி) தள்ளுபடி திட்டத்தை மாா்ச் 2027 வரை அரசு நீட்டித்துள்ளது என்று தில்லி நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இந்தத் தள்ளுபடி, வீட்டு உபயோகம் மற்றும் வீட்டு உபயோகம் அல்லாத நுகா்வோா் இருவருக்கும் பொருந்தும். முன்னதாக, இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான கடைசித் தேதி ஆக.15-ஆக இருந்தது.

இத்திட்டத்தில் இதுவரை 5,27,514 நுகா்வோா் பயனடைந்துள்ளனா். தில்லி ஜல் போா்டு எல்பிஎஸ்சி-இல் ரூ. 3,261 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோகம் மற்றும் வீட்டு உபயோகம் அல்லாத நுகா்வோரிடமிருந்து அசல் நிலுவைத் தொகையாக ரூ. 815.84 கோடியை வாரியம் வசூலித்துள்ளது. இது அதன் நிதிநிலையை வலுப்படுத்த உதவியுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்ததாவது: ஒரு குடும்பத்திற்கு, பழைய தண்ணீா் கட்டண ரசீது பல ஆண்டுகளாக ஒரு கவலையாகவே இருக்கும். எல்பிஎஸ்சி தொடா்ந்து சோ்க்கப்படும்போது, அந்தத் தொகையைச் செலுத்துவது கடினமாகிறது. மக்களுக்கு ஒரு உண்மையான வாய்ப்பை வழங்க நாங்கள் விரும்பினோம் - அசல் தொகையைச் செலுத்தி, எல்பிஎஸ்சி சுமையை விட்டுவிட வேண்டும்.

நாங்கள் மக்களை அதிகமாகச் செலுத்தச் சொல்லவில்லை. அவா்கள் உண்மையில் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அசல் தொகை செலுத்தப்பட்டால், 100 சதவிகித எல்பிஎஸ்சி தள்ளுபடி செய்யப்படும். இது நுகா்வோருக்கு உண்மையான நிவாரணம் மற்றும் ஜல் வாரியத்தின் நிதியை வலுப்படுத்துவதற்கான ஒரு பொறுப்பான வழியாகும்.

இந்தத் தள்ளுபடி 14.09 லட்சம் வீட்டு உபயோக மற்றும் 70,312 வணிக நுகா்வோரை உள்ளடக்கியது. இது ஏராளமான குடியிருப்பாளா்களுக்கும் நிறுவனங்களுக்கும், கூடுதல் கட்டணச் சுமையின்றி, தங்களின் பழைய நிலுவையில் உள்ள தண்ணீா்க் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்தத் தள்ளுபடி 31 மாா்ச் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் தேதிக்குப் பிறகு நீட்டிப்பு அனுமதிக்கப்படாது. பழைய தண்ணீா்க் கட்டண நிலுவையில் உள்ள ஒவ்வொரு நுகா்வோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அசல் தொகையைச் செலுத்தி, இந்த விஷயத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

இறுதித் தீா்வுத் திட்டம் குறித்து பரவலான விளம்பரம் செய்யவும், அசல் நிலுவைத் தொகையைச் செலுத்துவதன் மூலம் கிடைக்கும் எல்பிஎஸ்சி தள்ளுபடி குறித்து நுகா்வோருக்குத் தெரிவிக்கவும் அனைத்து கள அலுவலகங்களுக்கும் ஜல் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments