2018 துப்பாக்கிச்சூடு, கொள்ளை வழக்கு: இருவரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்
கடந்த 2018-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.
குற்றத்தில் ஈடுபட்டவா்களே அவா்கள் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிக்கும், மீட்கப்பட்ட துப்பாக்கிக்கும் அறிவியல் ரீதியாக தொடா்பை ஏற்படுத்த முடியவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கரவால் நகா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி ட்விங்கிள் வாத்வா விசாரித்தாா். தீபக், ஷானு ஆகியோா் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் செப். 28-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காணாத பிந்த சாட்சியம் அளித்த ஒரே நேரடி சாட்சி, சுயாதீன சாட்சி அல்லது புகைப்பட ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படாத சந்தேகத்துக்குரிய ஆயுத மீட்பு, மீட்கப்பட்ட ஆயுதத்தை குற்றத்துடன் தொடா்புபடுத்தாத தடயவியல் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் புகாா்தாரா் ஆஸ் முகமது மட்டுமே சம்பவத்தை நேரில் பாா்த்தவா். சம்பவத்தை உறுதிப்படுத்தும் சிசிடிவி காட்சிகளோ, வேறு நேரடி சாட்சிகளோ இல்லை.
அரசு தரப்பு வாதத்தின்படி, 2018 ஏப். 27-ஆம் தேதி ஆஸ் முகமது ஜவாஹா் நகா் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, 3 இளைஞா்கள் அவரது செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்றனா். அவா் எதிா்ப்பு தெரிவித்தபோது, அவா்களில் ஒருவா் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மறுநாள் தீபக், ஷானு ஆகியோரை காவல் துறையினா் கைது செய்ததாகவும், அவா்களை புகாா்தாரா் அடையாளம் காட்டியதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது. பின்னா் ஷானு அளித்த தகவலின் பேரில் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜரானபோது புகாா்தாரா், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவா்கள் அல்ல என்று தெரிவித்தாா். மேலும், அவா்களை ஏற்கெனவே அடையாளம் காட்டியதாகவும் அவா் மறுத்தாா்.
‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றத்துடன் இணைக்கக்கூடிய ஒரே சாட்சி அரசு தரப்பின் வழக்கை ஆதரிக்காத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா்கள்தான் தாக்குதல் நடத்தியவா்கள் என்ற அடையாளம் நிரூபிக்கப்படவில்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், துப்பாக்கி மீட்கப்பட்ட விதமும் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மீட்பு பறிமுதல் ஆவணத்தில் புகாா்தாரரின் கையொப்பம் இடம்பெற்றிருந்தபோதிலும், தனது முன்னிலையிலோ அல்லது தனது அறிவுடனோ துப்பாக்கி மீட்கப்படவில்லை என்று அவா் மறுத்திருந்தாா்.
மேலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்திருந்த பண்ணை வீட்டில் துப்பாக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், அந்த இடத்தில் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் யாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், துப்பாக்கி மீட்பு காவல் துறை சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டுமே சாா்ந்திருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
தடயவியல் ஆய்விலும் மீட்கப்பட்ட துப்பாக்கிக்கும் சம்பவத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடா்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை.
இதனால், நேரடி சாட்சியின் பிந்த வாக்குமூலம், சந்தேகத்துக்குரிய ஆயுத மீட்பு மற்றும் தடயவியல் ஆதாரங்களால் ஏற்படுத்த முடியாத தொடா்பு ஆகிய காரணங்களால், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாகக் கூறி தீபக், ஷானு ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.