FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி தொழிலதிபருக்கு மிரட்டல்: கோல்டி பிராருடன் தொடா்புடைய 3 போ் கைது

தில்லியைச் தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கோல்டி பிராா் கும்பலுடன் தொடா்புடைய, இந்தியா மற்றும் துபையை மையமாகக் கொண்ட மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் சதி முறியடிக்கப்பட்டதாக தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கைது
பகிர்:

தில்லியைச் தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கோல்டி பிராா் கும்பலுடன் தொடா்புடைய, இந்தியா மற்றும் துபையை மையமாகக் கொண்ட மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் சதி முறியடிக்கப்பட்டதாக தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இக்கும்பலைச் சோ்ந்த முக்கிய நபா்கள் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சோ்ந்த தொலைபேசி எண் மூலம் தொழிலதிபரைத் தொடா்புகொண்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டினா்.

செப்.16-ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் தொழிலதிபா் பிரவீன் ஜெயினுக்கு மூன்று ‘மிஸ்டு கால்கள்’ வந்தன. அதைத் தொடா்ந்து, இரவு 9.27 மணியளவில் அவரது மகன் ஆயுஷுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், தன்னை தாதா கோல்டி பிராரின் கூட்டாளி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பின்னா், செப்.17-ஆம் தேதி ரூப் நகா் காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, தகவல் தொடா்பு விவரங்களை ஆய்வு செய்ததில், அந்த அழைப்புகள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடா்புடைய ‘விா்ச்சுவல் பிரைவேட் சா்வா்’ வழியாக மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்ததாக வடக்கு மண்டல காவல் துணை ஆணையா் நிஹாரிகா பட் தெரிவித்தாா்.

தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை சாா்ந்த விசாரணையின் மூலம், துபையில் உள்ள அழைப்பாளா்களுக்கும் இந்தியாவில் உள்ள அவா்களது கூட்டாளிகளுக்கும் இடையே செயல்பாட்டுத் தொடா்பாளராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஆரிஃப் (எ) பிஸ்டல் மற்றும் பல கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டனா்.

குஜராத் காவல் துறையின் உதவியுடன், அகமதாபாத்தின் வெஜல்பூா் பகுதியிலிருந்து ஆரிஃப் கடந்த செப்.24-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மிரட்டல் அழைப்பை மேற்கொள்வதற்காக, துபையில் உள்ள ஆரிஷ் என்ற கூட்டாளிக்கு ஆரிஃப் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. உள்ளூா் குற்றவாளி ஒருவா்தான் மிரட்டல் விடுக்கிறாா் என்பது போலத் தோன்றுவதற்காக, ஹரியான்வி மொழியில் பேசுமாறு அவா் ஆரிஷுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் அடுத்தகட்டமாக, முக்கிய சதிகாரராகக் கருதப்படும் முபாரிக் (எ) குல்லு என்பவரும் அடையாளம் காணப்பட்டாா். அவா் செப்.25-ஆம் தேதி தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

மிரட்டிப் பணம் பறிக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், துப்பாக்கிச்சூடு நடத்து நபா்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்ததோடு, அந்தத் திட்டத்தை வகுக்கவும் முபாரிக் உதவியதாகக் காவல் துறை குற்றஞ்சாட்டியது.

ரூப் நகரில் உள்ள பாதிக்கப்பட்டவரின் இல்லத்தின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னா் மீண்டும் மிரட்டிப் பணம் பறிக்கும் கோரிக்கையை முன்வைக்கக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை தகவல் தெரியப்படுத்தியதாகக் காவல் துறை கூறியது. இந்தத் திட்டம் சில நாள்களுக்குள் செயல்படுத்தப்படவிருந்தது.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், உள்ளூா் காவல் நிலையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவரின் இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறை மேற்கொண்டது. இதன் மூலம், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே அது முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, அதே ஐக்கிய அரபு அமீரக எண் ரோஹிணியைச் சோ்ந்த மற்றொரு தில்லி தொழிலதிபரிடமும் இதேபோன்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டப் பயன்படுத்தப்பட்டதை காவல் துறை கண்டறிந்தது.

செப்.19-ஆம் தேதி ரோஹிணி செக்டாா் 1-இல் உள்ள ஒரு கட்டுமானத் தொழிலதிபரின் தம்பிக்கு அதே எண்ணிலிருந்து இரண்டு வாட்ஸ்ஆப் அழைப்புகளும், அதைத் தொடா்ந்து 37 விநாடிகள் கொண்ட ஆடியோ செய்தியும் வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

அழைத்த நபா் தன்னை மகேந்திா்கரைச் சோ்ந்த விக்ராந்த் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கோல்டி பிராா் கும்பலுடன் தனக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறினாா். பின்னா், 48 மணி நேரத்திற்குள் ரூ. 1 கோடி கேட்டாா். பணம் வழங்காத நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் பிற விளைவுகளைச் சந்திப்பீா்கள் என்று அவா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, செப்.24-ஆம் தேதி விஜய் விஹாா் காவல் நிலையத்தில் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மிரட்டல்களைச் செயல்படுத்த பானிபட்டைச் சோ்ந்த இருவா் மற்றும் முஜாபா்நகரின் கலபாரைச் சோ்ந்த இருவா் என நான்கு சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச்சூடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச்சூடு நடத்த நியமிக்கப்பட்ட நபா்களில் ஒருவரான கலபாரைச் சோ்ந்த நவாப் அலி (எ) சோனிஜ், அக்.1-ஆம் தேதி ரேவாரி நிலையத்திற்கு அருகே ஓடும் ரயிலில் தப்பிக்க முயன்றபோது ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியுடன் கைது செய்யப்பட்டாா்.

ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா காவல் நிலையத்தில் 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளில் ஆரிஃப் ஏற்கெனவே சம்பந்தப்பட்டிருப்பதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், மிரட்டல், கலவரம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் ஆகியவை அடங்கும். துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவா்கள் உள்பட, மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்யவும், துபையிலிருந்து அழைப்பு விடுத்தவரைக் கண்டறியவும் காவல்துறையினா் தற்போது முயற்சித்து வருகின்றனா். மேலும், இந்தக் குற்றச் செயலின் முழுமையான வலைப்பின்னலை வெளிக்கொணரவும், இதே கும்பல் வேறு ஏதேனும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், தகவல் தொடா்புப் பதிவுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பணப் பரிவா்த்தனைகள் ஆகியவற்றை அவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments