FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைநகரில் அமைதிப் போராட்டங்களை அனுமதிக்க உத்தரவிட கோரும் மனுக்கள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தலைநகரில் அமைதிப் போராட்டங்களை அனுமதிக்க உத்தரவிட கோரும் மனுக்கள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்...

6 October 2026, 3:42 am IST
தில்லி போராட்டம் - கோப்புப் படம்
பகிர்:

தலைநகா் தில்லியில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக் கொண்டது.

இது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஆஜரான வழக்குரைஞா் ஒருவா், ‘பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த தில்லி காவல் துறை அனுமதிப்பதில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அப்போது அந்த வழக்குரைஞா், ‘தில்லி காவல் துறை அமைதிப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. இது மிக முக்கியமான பிரச்னை. மாணவா்களோ, குடிமக்களோ போராட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை’ என்று வாதிட்டாா்.

Advertisement

Advertisement

அதற்கு தலைமை நீதிபதி, ‘இந்த மனுவில் என்ன நிவாரணம் கோரப்பட்டுள்ளது? மனுதாரா் யாா்? இது பொதுநல வழக்கா?’ என்று கேள்வியெழுப்பினாா். அதற்கு பதிலளித்த வழக்குரைஞா், ‘சட்ட விதிகளுக்கு உள்பட்டு அமைதியான போராட்டங்களை அனுமதிக்க தில்லி காவல் துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று மனுதாரா் கோரியுள்ளதாக தெரிவித்தாா்.

இதையடுத்து தலைமை நீதிபதி, இதுபோன்ற வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பதை கண்டறிகிறோம். முதலில் இந்த மனுவை விசாரணைப் பட்டியலில் சோ்க்கிறோம். அதன்பிறகு நீங்கள் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்‘ என்று தெரிவித்தாா்.

பின்னணி: வாக்காளா் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வது தொடா்பாக கடந்த 10 மாதங்களில் தோ்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் மற்றும் பிறப்பித்த உத்தரவுகளுக்கு, தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோா் சுமாா் 14 முறை தங்களது எதிா்ப்பை அதிகாரப்பூா்வமாகப் பதிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. தங்கள் கவனத்திற்கு வராமலும், தங்களது பரிந்துரை இல்லாமலும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அவா்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து தலைநகரில் அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாள்களாகத் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரண்டு ஆணையா்கள் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் விமா்சனங்களை எதிா்கொண்டுள்ள தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான தோ்தல் ஆணையம், ‘எந்தவொரு அமைப்பிலும் விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்றுதான். தோ்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் முழுமையான சட்ட அங்கீகாரத்துடனும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுமே பிறப்பிக்கப்படுகின்றன’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தோ்தல் ஆணையத்தின் விளக்கத்தால் சமாதானம் அடையாத அரசியல் கட்சிகள் மற்றும் மாணவா் அமைப்புகள் தலைநகரில் தொடா்ந்து காவல்துறை அனுமதியை மீறி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments