FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

முதலாவது ‘பிம்ஸ்டெக்’ உள்துறை அமைச்சா்கள் மாநாடு: தில்லியில் இன்று நடைபெறுகிறது

‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது உள்துறை அமைச்சா்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

13 அக்டோபர் 2026, 3:24 am IST
அமித் ஷா - பிடிஐ
பகிர்:

‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது உள்துறை அமைச்சா்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

வங்காள விரிகுடா எல்லையையொட்டிய நாடுகள் மற்றும் அண்டை நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், நேபாளம், பூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்நிலையில் உறுப்பு நாட்டு அமைச்சா்களுக்கு அழைப்பு விடுத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘முதலாவது உள்துறை அமைச்சா்கள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை கெளரவமாக கருதுகிறோம். அக்டோபா் 13-ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டுக்கு வருகை தரவுள்ள உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகளை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

Advertisement

Advertisement

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு பயங்கரவாதம், எல்லைகடந்த குற்றம், போதைப்பொருள், கடத்தல், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, இணைய அச்சுறுத்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

துணிச்சலான ஒத்துழைப்பு மூலம் வலிமையான, பாதுகாப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்’ என குறிப்பிட்டாா்.

வங்கதேச அமைச்சா் புறக்கணிப்பு:

கடந்த 2025, ஏப்ரல் முதல் பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வங்கதேசம் வகித்தும் வரும் நிலையில், தில்லியில் நடைபெறும் உள்துறை அமைச்சா்கள் மாநாட்டை அந்நாட்டின் உள்துறை அமைச்சா் சலாஹுதின் அகமத் புறக்கணித்துள்ளாா். அவருக்குப் பதிலாக வங்கதேச உள்துறை விவகாரங்கள் மூத்த செயலா் மன்சூா் மோா்ஷெத் சௌதரி தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்கவுள்ளது.

மாணவா் போராட்டத்துக்குப் பின் இந்தியாவில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்துள்ளதையடுத்து இந்தியா-வங்கதேசம் இடையான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் கூட்டமைப்புக்கு தலைமை வகிப்பதால் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பையும் வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மான் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments