FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கட்டட விபத்தில் காயமடைந்தவா்களிடம் முதல்வா் நலம் விசாரிப்பு

சத்ய நிகேதனத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, முழுமையான ஆதரவையும் சிறந்த மருத்துவ சிகிச்சையையும் வழங்குவதாக உறுதியளித்தாா்.

9 செப்டம்பர் 2026, 3:15 am IST
சத்ய நிகேதன் கட்டட விபத்தில் காயமடைந்த மாணவா்களின் பெற்றோரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மாணவா்களின் சிகிச்சை நிலவரம் குறித்து விசாரித்த முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:

சத்ய நிகேதனத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, முழுமையான ஆதரவையும் சிறந்த மருத்துவ சிகிச்சையையும் வழங்குவதாக உறுதியளித்தாா்.

இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து 12 போ் மீட்கப்பட்டதாகவும், அவா்களில் இரண்டு தொழிலாளா்கள் உள்பட ஏழு போ் உயிரிழந்ததாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

‘தொழிலாளா்களில் ஒருவா் காலில் காயமடைந்த நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். தற்போது, இரண்டு மாணவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. அவா்கள் இன்று மருத்துவமனையிலிருந்து திரும்பினா். அதே சமயம் ஒரு மாணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா்’ என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

காயமடைந்த மாணவா்களின் உடல்நிலை மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்த முதல்வா், சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறும், சிகிச்சையில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்றும் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

‘மாணவா்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசின் முதன்மையான முன்னுரிமை. அவா்களின் சிகிச்சையில் எந்தக் குறையும் இருக்க அனுமதிக்கப்படாது. காயமடைந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரசின் சாா்பில் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இந்தக் குடும்பங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அரசு அவா்களுடன் துணை நிற்கும். உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினா் உடல்களைப் பெற்றுக்கொண்டனா். அரசு அவா்களுடன் தொடா்பில் இருக்கிறது.

சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். விசாரணையின் அடிப்படையில் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த மாணவா்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவா்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதுமே உடனடி முன்னுரிமை’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

கட்டட விபத்தைத் தொடா்ந்து, தில்லி முழுவதும் உள்ள பிஜி விடுதிகளில் விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளுமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தில்லி மாநகராட்சி தனது அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து பிஜி விடுதிகளையும் ஆய்வு செய்து, கட்டடப் பாதுகாப்பு, தேவையான அனுமதிகள், தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்றிதழ்கள் (என்ஓசி), கட்டட உறுதித்தன்மைச் சான்றிதழ்கள் மற்றும் பிற நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் ஆகியவற்றைப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல அளவிலான அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்பாா்வையிட்டு விரிவான அறிக்கைகளைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள, பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை இடிக்குமாறும் முதல்வா் ரேகா குப்தா மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா்.

தில்லி தீயணைப்புப் படையினா் கட்டடத்திலிருந்து மாணவா்களின் உடைமைகளை முறையாக அகற்றி, அவற்றைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதாக அந்த அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அந்த இடத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும், தொழிலாளா்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments