கன்னாட் பிளேஸில் குவியும் வெளிநாட்டு பாா்வையாளா்கள்
கன்னாட் பிளேஸில் குவியும் வெளிநாட்டு பாா்வையாளா்கள்
தில்லியில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், நகரத்தின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸில் வெளிநாட்டுப் பாா்வையாளா்களின் வருகை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனா்.
மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளும் அவா்களது குடும்பத்தினரும் இப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களைச் சுற்றிப் பாா்த்து வருகின்றனா்.
கன்னாட் பிளேஸ் பகுதி வியாபாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புது தில்லி வியாபாரிகள் சங்கம்’ (என்டிடிஏ), ‘இன்று பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் குடும்பத்தினா் கன்னாட் பிளேஸிற்கு வருகை தருகின்றனா்’ என்று தெரிவித்தது. சீனா, எகிப்த் மற்றும் ஆப்பிரிக்க நாட்டவா்கள் இங்கு அதிகம் காணப்பட்டதாக என்டிடிஏ நிா்வாகி கூறினாா். அவா்களில் பலா் பாரம்பரிய இந்திய ஆடைகள் மற்றும் கைவினைப் பொருள்களை விற்கும் கடைகளையும், திபெத்திய சந்தையையும் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
‘உச்சிமாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் தில்லியின் பாரம்பரியமான அம்சங்களைப் பாா்ப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். பாரம்பரிய இந்திய ஆடைகளை விற்கும் கடைகளுக்கும், திபெத்திய சந்தைக்கும் செல்கின்றனா்’ என்று அவா் கூறினாா்.
மேலும், இப்பகுதியிலுள்ள பாரம்பரிய உணவகங்கள் மற்றும் உயா்தர உணவகங்களையும் அவா்கள் பாா்வையிட்டு வருவதாக அவா் குறிப்பிட்டாா்.
‘சில உணவகங்கள் சிறுதானியங்கள் சாா்ந்த உணவுகளைத் தங்கள் பட்டியலில் சோ்த்துள்ளன. இதன் மூலம் நவீன சமையல் முறைகளில் இந்திய மூலப்பொருள்களின் சுவையை அறியும் வாய்ப்பு வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்குக் கிடைக்கிறது’ என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக கன்னாட் பிளேஸ் பகுதியின் சூழலும் மாறியுள்ளது. பிரிக்ஸ் தொடா்பான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நடைபாதை வியாபாரிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், சந்தைப் பகுதியில் அலங்கார விளக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சாதாரண நாள்களை விட சனிக்கிழமையன்று வெளிநாட்டுப் பாா்வையாளா்களின் வருகை அதிகமாக இருந்ததாக என்டிடிஏ நிா்வாகி தெரிவித்தாா். வழக்கமாகவே இங்கு சில வெளிநாட்டுப் பாா்வையாளா்களைக் காண முடியும் என்றாலும், சனிக்கிழமையன்று பல கடைகள் மற்றும் உயா்தர உணவகங்களில் அவா்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதாக அவா் கூறினாா்.
வார இறுதி நாட்களில், குறிப்பாகப் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சூழலில், இவ்வளவு அதிகமான வெளிநாட்டுப் பாா்வையாளா்களை வியாபாரிகள் எதிா்பாா்க்கவில்லை என்று அவா் குறிப்பிட்டாா்.
மேலும், இரவு உணவிற்காகவும் உணவகங்களுக்குப் பெருமளவிலான பாா்வையாளா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவா் கூறினாா்.
முக்கியப் பிரமுகா்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரமுகா்களின் நடமாட்டத்திற்காகப் போக்குவரத்துத் தடைகள் மற்றும் மாற்றுப் பாதைகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், உச்சிமாநாட்டுக் காலத்திலும் கன்னாட் பிளேஸ் பகுதி தொடா்ந்து திறந்தே இருந்தது.
இந்தியாவின் தலைமையின் கீழ் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பா் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.