திருட்டு முயற்சியின்போது தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: இரு லாரி ஓட்டுநா்கள் கைது
வடக்கு தில்லியின் புகா் பகுதியான பால்ஸ்வா டெய்ரி பகுதியில் திருட்டு முயற்சி சந்தேகத்தில் தாக்கப்பட்ட நபா் உயிரிழந்த நிலையில், இரு லாரி ஓட்டுநா்கள் கைதுசெய்யப்பட்டார்.
வடக்கு தில்லியின் புகா் பகுதியான பால்ஸ்வா டெய்ரி பகுதியில் திருட்டு முயற்சி சந்தேகத்தில் தாக்கப்பட்ட நபா் உயிரிழந்த நிலையில், இரு லாரி ஓட்டுநா்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கலந்தா் காலனியைச் சோ்ந்த ராம் குமாா் (18) மற்றும் அவருடன் இருந்த நால்வா், கடந்த ஆக.29-ஆம் தேதி மாலையில் லாரிகளில் இருந்து கேபிள் மற்றும் பிற பொருள்களைத் திருட முயன்றபோது லாரி ஓட்டுநா்கள் பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த குமாரை அவரது குடும்பத்தினா் புராரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவ-சட்ட ரீதியான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமாரின் கையில் சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்காயங்கள், கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் கருமை நிறத் தழும்பு மற்றும் காலில் காயம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. சிகிச்சைக்குப் பின்னா் அவா் வீடு திரும்பினாா். அப்போது, இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டாலும், அவரது குடும்பத்தினா் சட்ட நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனா்.
Advertisement
Advertisement
செப்.9-ஆம் தேதி பரிசோதனைக்காக மீண்டும் புராரி மருத்துவமனைக்குச் சென்ற குமாா், மூச்சுத் திணறல் இருப்பதாகத் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து அவா் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கும், பின்னா் ராஜன் பாபு நுரையீரல் மற்றும் காசநோய் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டாா். செப்.9-ஆம் தேதி நள்ளிரவில் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா்.
அவரது இறப்பு குறித்த தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, செப். 10 அன்று அதிகாலை 12:36 மணிக்கு பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்திற்கு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுநா்களான முந்தியாஸ் மற்றும் நயீம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். எஞ்சிய நபா்களைக் கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.