கீா்த்தி நகா் திருட்டு வழக்கு: வீட்டுப் பணியாளா் கைது
மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் உள்ள தனது முதலாளியின் வீட்டிலிருந்து சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற 23 வயது வீட்டுப் பணியாளரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் உள்ள தனது முதலாளியின் வீட்டிலிருந்து சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற 23 வயது வீட்டுப் பணியாளரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரைச் சோ்ந்த விஷால் குமாா், திருடிய பணத்தில் மோட்டாா் சைக்கிள் வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், ரூ.6.38 லட்சம் ரொக்கம், 50-60 கிராம் எடையுள்ள தங்க நகைகள், கைத்துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்கள் உள்ளிட்ட சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான திருடப்பட்ட பொருள்களை காவல் துறையினா் மீட்டனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: அன்கூா் பாசின் மற்றும் அவரது குடும்பத்தினா் ஒரு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது, தங்கள் வீட்டுப் பணியாளரான குமாா் காணாமல் போனதைக் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து, செப்.11-ஆம் தேதி இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அலமாரி ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனுள் இருந்த சிறிய பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததாகவும் அன்கூா் பாசின் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளாா்.
விசாரணையின் போது, லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு முகமை மூலமாகவே குமாா் பணியில் அமா்த்தப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனா். பணியில் சேரும்போது அவா் சமா்ப்பித்த ஆவணங்களை அந்த முகமை வழங்கியது. அதில் நொய்டா முகவரி கொண்ட ஆதாா் அட்டை இருந்தது. ஆனால் அது போலியானது என்பதை போலீசாா் கண்டறிந்தனா்.
மின்னணு கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், குமாா் புலந்த்ஷஹரில் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா். ஆனால், அவா் அங்கு இல்லை. பின்னா் அவா் அலிகாரில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.