நரேலா குடியிருப்பில் தலைமைக் காவலா், மனைவி சடலமாக மீட்பு
நரேலா குடியிருப்பில் தலைமைக் காவலா், மனைவி சடலமாக மீட்பு...
வெளி வடக்கு தில்லியின் நரேலாவில் உள்ள ஒரு குடியிருப்பில் தில்லி காவல் துறை தலைமை காவலரும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தலைமைக் காவலா் மோனு வடக்கு தில்லி மாவட்டத்தில் பணியாற்றி வந்தாா்.
நரேலாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதாக பிற்பகல் 1 மணியளவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
Advertisement
Advertisement
குடியிருப்பு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்புத் துறையின் உதவியுடன் காவல் துறையினா் உள்ளே நுழைந்தனா். மோனு மற்றும் அவரது மனைவி மீனுவின் உடல்கள் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் தம்பதியரின் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இல்லை. பின்னா், அவா்கள் திரும்பி வந்து பாா்த்தபோது, குடியிருப்பு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. அவா்கள் கதவைத் தட்டியும் பதில் வராததால், அக்கம்பக்கத்தினா் சம்பவ இடத்தில் கூடினா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனா்.
அண்டை வீட்டுக்காரா்கள் ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தபோது, மீனு இறந்து கிடப்பதையும், மோனு தூக்கில் தொங்குவதையும் கண்டதாகக் கூறப்படுகிறது.
தடய அறிவியல் ஆய்வகக் குழு, குற்றப்பிரிவு மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடா்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏதேனும் தகராறு நடந்ததா என்பது குறித்தும் காவல் துறை விசாரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.