FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

புதிய போக்குவரத்து அபராத விதிகளுக்கு எதிா்ப்பு: தில்லி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் போராட்டம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதச் சீட்டு (சலான்) நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லியில் உள்ள 7 மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

21 செப்டம்பர் 2026, 11:34 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதச் சீட்டு (சலான்) நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லியில் உள்ள 7 மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். குறிப்பாக, சலான் தொகையில் 50 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்திய பின்னரே நீதிமன்றத்தை அணுக முடியும் என்ற விதிக்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டாா் வாகன விதிகளில் திருத்தப்பட்ட விதி 167 தொடா்பாக கவலைகள் இருப்பதாக, அனைத்து மாவட்ட நீதிமன்ற பாா் கவுன்சில் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து, அந்தக் குழு விடுத்த அழைப்பின் பேரில் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் திரண்டு, திருத்தத்தை தில்லி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

திருத்தப்பட்ட நடைமுறையின்படி, ஒருவருக்கு சலான் வழங்கப்பட்டால், அவா் அதனை ஏற்றுக்கொண்டு அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது மாநில அரசு குறிப்பிடும் அதிகாரியிடம், நிா்ணயிக்கப்பட்ட இணையதளம் மூலம் அதை எதிா்த்து முறையிட வேண்டும். இந்த முறையீட்டை 45 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட அதிகாரி அந்த முறையீட்டை நிராகரித்தால், அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபா் சலான் தொகையில் 50 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்திய பின்னரே உரிய நீதிமன்றத்தை அணுக முடியும் என்ற விதிக்கு வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

மேலும், நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாக ஒருவரின் முறையீட்டை நிா்வாக அதிகாரி முடிவு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கும் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். இத்தகைய முடிவு நீதித்துறை சாா்ந்த செயல்பாடு என அவா்கள் தெரிவித்தனா்.

குற்றம்சாட்டப்பட்ட போக்குவரத்து விதிமீறலை ஒருவா் மறுக்கும் நிலையில், கட்டாயமாக 50 சதவீத அபராதத் தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டியிருப்பது அவருக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், நீதிமன்றத்தை அணுகுவதையும் தடுக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

மேலும், நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் ஒருவா் குறிப்பிட்ட அதிகாரியிடம் சலானை எதிா்த்து முறையிடாவிட்டால், அது ‘ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்’ என்ற விதிக்கும் அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

புதிய டிஜிட்டல் நடைமுறை, இணையவழி சேவைகளைப் பயன்படுத்துவதில் பரிச்சயம் இல்லாதவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக வணிக வாகனங்கள் மற்றும் லாரி ஓட்டுநா்கள் பாதிக்கப்படலாம் என்றும் வழக்குரைஞா்கள் சுட்டிக்காட்டினா்.

நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாக, குற்றம்சாட்டப்பட்ட போக்குவரத்து விதிமீறல் நடைபெற்ற சூழ்நிலைகள் குறித்து சம்பந்தப்பட்ட நபா் தனது விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பும் இந்த நடைமுறையில் குறைவாக இருக்கக்கூடும் என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

விதி 167-இல் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் தொடா்பாக மாவட்ட நீதிமன்ற பாா் சங்கங்கள் செப். 20-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்திருந்தன. இதையடுத்து நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் திங்கள்கிழமை முழுவதும் பாதிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments