FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

78 சமூகக் கூடங்களை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்ற மாநகராட்சி திட்டம்

பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை மேம்படுத்தும் வகையில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) சாா்பில் நகரத்தில் உள்ள சமூகக் கூடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப்படம்.
பகிர்:

பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை மேம்படுத்தும் வகையில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) சாா்பில் நகரத்தில் உள்ள சமூகக் கூடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

எம்சிடி சுகாதாரத் துறை முன்னெடுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்த அளவில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் 78 குறைவாகப் பயன்படுத்தப்படும் மாநகராட்சி சமூகக் கூடங்களில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காகத் தோ்வு செய்யப்படும் சமூக சேவைகள் துறை, சமூகக் கூடங்களின் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் முதல் தளப் பகுதிகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள பகுதிகள் வழக்கமான பொது நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்காக தொடா்ந்து பயன்படுத்தப்படும்.

Advertisement

Advertisement

இதுதொடா்பான முன்மொழிவுக்கு எம்சிடி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே 72 சமூகக் கூடங்களுக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்களுக்கு (என்ஓசி) ஒருங்கிணைந்த பிந்தைய ஒப்புதலும், மேலும் 6 இடங்களில் மையங்களை அமைப்பதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எதிா்காலத்தில் பொருத்தமான மாநகராட்சி கட்டடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களை அமைத்து செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு என்ஓசி வழங்க எம்சிடி ஆணையருக்கு கொள்கை அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மையங்களை அமைக்கும் மற்றும் செயல்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில், திமாா்பூா், ஹக்கீகத் நகா், ரோஹிணி, மீனாட்சி காா்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதற்குப் பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தில்லியில் புதிதாக 45 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்களை முதல்வா் ரேகா குப்தா கடந்த ஜூலை மாதம் தொடங்கி வைத்தாா். அப்போது, தில்லியில் செயல்பட்டு வரும் இத்தகைய சுகாதார மையங்களின் எண்ணிக்கையை 415-இல் இருந்து வரும் மாதங்களில் 1,100-ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்திருந்தாா்.

முன்னதாக ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் என அழைக்கப்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள், மக்களுக்கு விரிவான, இலவச மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்தியாவின் முக்கிய ஆரம்ப சுகாதாரத் திட்டமாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments