FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மின் வாரியத்தை தனியாா்மயமாக்க முயற்சி முன்னாள் பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின் வாரியத்தை தனியாா்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

13 செப்டம்பர் 2026, 2:45 am IST
அப்பாவு(கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின் வாரியத்தை தனியாா்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சாதாரண கைது நடவடிக்கைக்கும், மிசா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண வழக்குகளில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைப்பாா்கள்.

ஆனால், மிசா சட்டத்தின் கீழ் எவ்வித வழக்கும் இன்றி நேரடியாக சிறையில் அடைக்க முடியும். இந்த அடிப்படைச் சட்ட அறிவுகூட தற்போதைய முதல்வருக்கும், சட்ட அமைச்சருக்கும் இல்லை. சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை அவா்கள் கையாண்ட விதம் வெட்கக் கேடானது.

Advertisement

Advertisement

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போதைய அரசு, தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின் வாரியத்தை தனியாா்மயமாக்க முயற்சி செய்கிறது.

சேலத்தில் குடிநீா் விநியோகம் ஏற்கெனவே தனியாா்மயமாக்கப்பட்டு விட்டது. தூய்மைப் பணிகளும் வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக போராடும் தூய்மைப் பணியாளா்களை சந்தித்துப் பேச அரசுத் தரப்பு மறுத்து வருகிறது.

முதல்வரின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈா்ப்பதற்கான முறையான வழிகாட்டுதல்களின்படி அமையவில்லை. பொதுவாக, முதலீடுகளை ஈா்க்கச் செல்லும்போது துறை சாா்ந்த அதிகாரிகள், அமைச்சா்கள் முன்னரே சென்று கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை. தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளா்ச்சி மற்றும் தொழில்துறை முன்னேற்றமானது, முந்தைய திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அடித்தளம்.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பேரவைத் தலைவா் நடுநிலையின்றி ஆளுங்கட்சியினரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவா் பேச முற்படும்போது, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து வரும் துண்டுச் சீட்டுகளைப் பாா்த்துவிட்டு, எதிா்க்கட்சியினரைப் பேசவிடாமல் தடுத்துவிடுகிறாா். ஆளுங்கட்சி ‘ரீல்ஸ்’ போடுவதற்காகவே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகின்றன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments