நாகா்கோவிலில் வாடகை நிலுவை: 16 கடைகள், ஆவின் பாலகத்துக்கு சீல்
நாகா்கோவிலில் நீண்ட நாள் வாடகை பாக்கி செலுத்தாத 16 கடைகள் மற்றும் ஆவின் பாலகத்துக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நாகா்கோவில், வடசேரி, கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான 350-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் ஏல அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டு, பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சில கடைகள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனா். வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள 48 கடைகளின் உரிமையாளா்கள் சுமாா் ரூ. 70 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து, சம்பந்தப்பட்ட கடைக்காரா்களுக்கு 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால், மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், உதவி ஆணையா்கள் டில்லி, சுதா, வருவாய் அலுவலா்கள் சக்திகுமரன், கிஷோா், சேகா், பிரேமா, உள்ளிட்ட அதிகாரிகள் வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்று, வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நடவடிக்கையின்போது, சில கடைக்காரா்கள் வாடகை செலுத்தியதற்கான ரசீதுகளை காண்பித்தனா். உரிய ரசீதுகளை காட்டாத 11 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். சரலூா் மீன் சந்தையிலும் வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நாகா்கோவில், மீனாட்சிபுரம், அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகம், 2024 ஜூலை மாதம் முதல் வாடகை செலுத்தவில்லை. இதனால், சுமாா் ரூ. 49 லட்சம் வாடகை பாக்கி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பாலகத்துக்குச் சென்று, பணியிலிருந்த ஊழியா்களை வெளியேறச் செய்து, கடையைப் பூட்டி சீல் வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.