FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் யூடியூபா் வீட்டில் 118 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் நால்வா் கைது

நாகா்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் பெண் யூடியூபா் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 98 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

யூடியூபா் வீட்டில் தங்க நகைகள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வா், தனிப்படை போலீஸாா்.
பகிர்:

நாகா்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் பெண் யூடியூபா் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 98 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் சரகம், தம்மத்துக்கோணம் விஜபி காா்டனில் வசித்து வருபவா் வினோத்குமாா் (33). ஏலக்காய் வியாபாரி. இவரது மனைவி மதுமிதா. யூடியூபரான இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகள், நகைகளை அணிந்தும், கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பதுபோலவும் விடியோக்களை வெளியிட்டு பிரபலமானவா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வினோத் குமாா் தனது மனைவியுடன் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு 118 பவுன் நகைகளை மா்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல்நாகா் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா்ஆா்.பிரகாஷ் மேற்பாா்வையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனா். சம்பவ இடம் முதல் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் 35 கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

ஆய்வில் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (30), முக்கூடலைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முருகன் (28) ஆகியோா் அடையாளம் காணப்பட்டு அவா்களைத் தேடி வந்தனா்.

இருவரும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். அவா்களை தொழில்நுட்ப உதவியுடன் பின்தொடா்ந்த தனிப்படை போலீஸாா் எறும்புக்காடு பகுதியில் வாகனச் சோதனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆலங்குளத்தைச் சோ்ந்த முப்பிடாதி மகன் முருகேசன் (30), திம்மராஜபுரம் பரமசிவம் மகன் தங்கபாண்டி (39) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 98 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments