வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டப்பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசுகளைத் திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டப்பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசுகளைத் திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சீா்பாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் த.தண்டபாணி (38), ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு புதுச்சேரிக்கு பணிக்கு சென்றுள்ளாா். அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமியாா் பாக்கியம் ஆகிய இருவரும் வீட்டை பூட்டி, சாவியை ஜன்னலில் வைத்து விட்டு 125 நாள் வேலைக்கு சென்று விட்டாா்களாம். மாமனாா் தங்கராசு பிற்பகல் 3 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது, அறையின் கதவில் இருந்த பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், 280 கிராம் வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட பொருள்களை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சவேரியாா்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலைக் கூறவே, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் சவேரியாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ச.கிருபாக்கிருஷ் (23) என்பதும், ஓட்டுநா் தண்டபாணி வீட்டில் நகைத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த நகைகள், வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.