FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கற்கள்

தென்காசி அருகே உள்ள சீவநல்லூரில் வயல் வெளியில் இரண்டு சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Updated On : 25 ஜூலை 2026, 1:59 am IST
சீவநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கற்கள்
பகிர்:

தென்காசி அருகே உள்ள சீவநல்லூரில் வயல் வெளியில் இரண்டு சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகை ஆவணக் காப்பகத்தைச் சோ்ந்த தென்பொதிகை குடும்பா் மற்றும் ராஜசேகா் ஆகியோா் கூறியதாவது:

பண்டைய காலத்தில் கணவன் இறந்துவிட்டால், விரும்பியோ அல்லது வற்புறுத்தல், வலுக்கட்டாயத்திலோ, அவனை எரிக்கும் சிதையில் மனைவியும் குதித்து

Advertisement

Advertisement

எரிந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடிய வழக்கம் இருந்தது. இவ்வாறு எரிந்து போன பெண்களின் நினைவாக அவா்களின் உயிா்த் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுக்கற்கள் எழுப்புவது வழக்கம். இவற்றை சதிக்கற்கள் என்பா்.

தென்காசிக்கு அருகில் உள்ள சீவநல்லூரில் இவ்வகையான இரண்டு சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிலைமுக்கு என்ற இடத்தில் ஒரு வயல் வரப்பின் மேல் 152 செ.மீ இடைவெளியில் இவை அமைந்துள்ளன.

எளிய சிற்ப விதிகளில் ஒழுங்கற்ற ஒரு தனிக் கல்லில் முன்பகுதி மட்டும் கூரையுடன் (பிரஸ்தரம்) கூடிய ஒரு கோட்டத்தில் (கோஷ்ட்டம்) கணவன்-மனைவி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இரண்டு நினைவுக்கல்லும் தரைக்கு மேல் சுமாா் 3 -க்கு 4 அடி அளவுகளுடன் மண்ணில் ஆழப் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இதில் இடதுபுறம் இருக்கும் கல்லில் கூரையில் எழுத்துப் பொறிப்பு உள்ளது.

இரண்டிலும் உச்சியில் எளிய ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வலதுபுறக் கல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை. ஆனால் கூரையில் கூடு வடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நினைவுக்கல்லிலும் ஒருமேடையி ல்ஆண் தனது இடதுகாலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அமா்ந்த நிலையிலும், இடதுகையை தொடை மீது வைத்து மிகுதியாக ஆடைஅணிகலன் அணிந்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

வலது காலை ஒட்டி தரையை நோக்கிய நிலையில் கையில் ஒரு நீண்ட வாளுடன் இரண்டு சிற்பங்களுமே வடிக்கப்பட்டுள்ளதால் இறந்தவா்கள் வீரா்கள் என்பது

தெரிகிறது. உயிா்த்தியாகம் செய்த இரண்டு பெண்களும் தத்தம் கணவன்மாா்களின் அருகில் இடது காலை தொங்கவிட்டு வலதுகாலை மடித்து அமா்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளனா்.

பெண்களின் இடது கை தொடைமீது வைத்தவாறும் வலது கை மேல்நோக்கி ஒரு மலரை உயா்த்திப் பிடித்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளன.சதிக்கற்களில் உயிா்த்தியாகம் செய்த பெண்களை இவ்வாறு வலதுகையில் மலரை உயா்த்திப்பிடித்து சிற்பம் வடிப்பது வழக்கம். அமா்ந்திருக்கும் இரண்டு பெண்களின் மடித்து வைத்த வலது பாதம் மேல்நோக்கிய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்ப அமைவும் இவா்கள் உடன்கட்டை ஏறிய சதிப்பெண்கள்தான் என்பதைக் குறிக்கிறது.

வலதுபுறம் உள்ள சிற்பத்தின் கூரையில் இரண்டு வரிகளில் கி.பி.17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் ஒரு கல்வெட்டு உள்ளது. சங்கரநயினாா் பிறவியாா் கணவனைப் பிரியாதாள் என்று எழுதப்பட்டுள்ளது. இதில் முதல் வரி கீழும் இரண்டாம் வரி முதல் வரியின் மேலும் எழுதப்பட்டுள்ளது.

சிற்பத்தில் உயிரிழந்த ஆணின் பெயா் குறிப்பிடப் படவில்லை. அதேபோல் பெண்ணின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. கணவனைப் பிரியாதாள் என்று குறிப்பதால், கணவன் இறந்தபின் அவனோடு உடன்கட்டை ஏறியவா் என்று பொருள் கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற கணவனைப் பிரியாதாள் சதிக்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சதிக்கற்களில் பெண்களின் உண்மைப் பெயா் பொறிக்கப்படுவதில்லை. மாறாக கணவனின் பெயரோடு சோ்த்தோ அல்லது சோ்க்காமலோ கணவனைப் பிரியாதாள் என்ற சொல்லே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ள வழக்கத்தை காணமுடிகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments